headlines

img

ஏர் பூட்டும் உழவர்களின் போர் முழக்கம் வலுக்கிறது...

தலைநகர் தில்லியில் விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் வீரஞ்செறிந்த உறுதிமிக்க போராட்டத்தை, ஊடகங்கள் மறைக்க முயன்றாலும் அந்த பேரெழுச்சி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல மாதங்களுக்கு முன்பே இந்தபேரணிக்கான அறைகூவலை விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தபோதும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூட மோடி அரசு தயாராகயில்லை. 

இந்நிலையில் விவசாயிகள் திட்டமிட்டபடி தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். அவர்களை அழைத்துப் பேசுவதற்கு கூட மோடி அரசு பொருத்தமற்ற நிபந்தனைகளை முன்வைக்கிறது. தங்களது போராட்டத்திற்கு ஜந்தர்மந்தர் அல்லது ராம்லீலா மைதானத்தை ஒதுக்குமாறு விவசாயிகள் கோரியநிலையில் புராரி மைதானத்திற்கு வந்தால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமித்ஷா முன்வைத்த நிபந்தனையை நிராகரித்து விவசாயிகள் தொடர்ந்து போராடுகின்றனர். நாளுக்குநாள் பல்வேறு மாநிலங்களிலிருந்து தில்லியில் வந்து குவியும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடும் குளிரையும்பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடுவது விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரு வீர காவிய
மாகும்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. ஆனால் அதை ஏற்க மறுத்துவரும் மோடி அரசு போராடும் விவசாயிகளை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.ஆனால் விவசாயிகள் அத்தனை அடக்குமுறைகளையும் தூள்தூளாக்கிவிட்டனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இந்த வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பலன் ஏற்பட்டிருப்பது போல்பிரதமர் மோடி கதையளக்கிறார். மனதின் குரல்நிகழ்ச்சியில் பேசிய அவர் ஜிதேந்திர போயிஜி என்ற விவசாயிக்கு கிடைக்க வேண்டிய பணம்இந்த சட்டத்தின்மூலம்தான் கிடைத்தது என்று கூறியுள்ளார். விவசாயியின் விளை பொருளுக்குஉரிய விலை கிடைக்க மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக கூறுவது கேப்பையில் நெய் வடிகிற கதைதான்.

இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் கையளிப்பு செய்வதற்காகவே இந்த சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம்சிறு, குறு விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றும் நோக்கம் கொண்டது. கார்ப்பரேட்டுகளை நம்பியே அவர்கள் பயிர்த் தொழிலைசெய்ய வேண்டிய நிலையை உருவாக்கக்கூடியது. இதை புரிந்து கொண்ட காரணத்தினால் தான் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் விவசாயிகள் போராட்டக்களத்திற்கு வந்துள்ளனர். 
புதிய சட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு விடுதலை கிடைத்தது என்கிறார் மோடி. ஆனால்அடிமைத்தளையை ஏற்க மாட்டோம் என விவசாயிகள் ஆர்த்தெழுந்து நிற்கின்றனர். தமிழக விவசாயிகளும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து முழுமையாக களம் காண வேண்டும்.
 

;