headlines

img

சலுகையல்ல, தண்டனை.....

தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள்கூடுதலாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை தராமல்இருப்பதற்குதான் இந்த கடன் உதவி. மேலும்பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில்மத்திய அரசு திணிக்கும் நடவடிக்கைகளைஅந்தந்த மாநிலங்களில் நடைமுறைப்படுத்தியதற்காகவே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது சலுகையல்ல, கூடுதல் சுமை. கொரோனா காலத்தில் கூட தமிழகம் கோரியநிவாரண உதவியை மத்திய அரசு வழங்க
வில்லை. ஜிஎஸ்டி வரியை தமிழகத்திற்கு உரிய பங்கையும் தரவில்லை. மாறாக மின்துறையை தனியார்மயமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் கூடுதலாக கடன் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்கமாகவே தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு ஜிஎஸ்டி வரி நிலுவை உள்ளிட்டவற்றை வாதாடிப் பெற வக்கின்றி மத்திய அரசின் உத்தரவை ஏற்று பல்வேறு ‘சீர்திருத்த’ நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்டுள்ள பரிசுதான்இது. இது பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏதுவாக நடந்து கொண்டதற்காக அளிக்கப்பட்டுள்ள சலுகை. ஆனால் இதனால் தமிழகம் மீள முடியாத கடன் சுமையில் சிக்குவதோடு, தனியார்மய நடவடிக்கைகளால் பெரும் பாதகத்தை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பெரும் கிளர்ச்சிப் போரை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சட்டங்களை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வசதியாக அதிமுக அரசு முந்திக் கொண்டு விவசாயிகள் நிலங்களைகேள்வியின்றி பறிப்பதற்கான மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, மின்துறையை தனியார்மயமாக்குதல், முதலாளிகளின் விருப்பத்திற்கேற்ப நகர உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் போன்றவற்றை நிறைவேற்றியதற்காக இந்த சலுகை வழங்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. ஐந்துமாநில அரசுகள் வெளிச்சந்தையில் கூடுதலாக 16 ஆயிரத்து 728 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.தமிழகத்தின் கடன் 2010-21ஆம் நிதியாண்டில் 4,56,660 கோடியாக இருக்கும் என்றுபட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஒரே ஆண்டில்தமிழகத்தின் கடன் சுமை ரூ.60 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியானது. கொரோனா கால நெருக்கடியால் தமிழகத்தின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் நிலையில் மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைகளை பெறாமல் மேலும் மேலும் கடன் வாங்கி குவிப்பது தமிழக பொருளாதாரத்தை மீள முடியாத நெருக்கடியில் தள்ளி விடும். ஆனால் ஆட்சியாளர்களுக்கு இது குறித்து கவலை இருப்பதாக தெரியவில்லை.
 

;