headlines

img

நீட் எனும் கொடுவாள் நிரந்தரமாய் தொலையட்டும்...

வழக்கமான குழப்பம், குளறுபடிகளுடன் நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 16லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் 1லட்சத்து 18ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு மையங்களில் புதுமணப்பெண்ணின் தாலியை அகற்றும் அளவுக்கு தேவையற்ற கெடுபிடிகள் காட்டப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்புடன் தேர்வு எழுத வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா என்பதுகுறித்து எந்தத் தெளிவும் இல்லை. 
நீட் தேர்வுக்கு முதல் நாள் அடுத்தடுத்து மூன்று மாணவச் செல்வங்கள் அழுத்தம் காரணமாகதமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா,திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட னர். இவர்கள் மூவருமே ஏற்கெனவே நீட் எழுதிபோதிய மதிப்பெண் பெறாததால் மருத்துவக் கல்லூரியில் இடம்கிடைக்காமல் இந்த ஆண்டும்விண்ணப்பித்திருந்தவர்கள்.

நீட் தேர்வுக்கு அரியலூர் அனிதா துவங்கி விழுப்புரம் பிரதிபா, மோனிஷா, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சை லைஷியா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவைசுபஸ்ரீ, சென்னை ஏஞ்சலின், புதுக்கோட்டைஹரிஷ்மா, நெல்லை தனலட்சுமி, அரியலூர் விக்னேஷ் உட்பட தொடர்ச்சியாக மாணவச்செல்வங்கள் பலியாகி வந்துள்ளனர். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை யில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குக் கூட அனுப்பாமல் குப்பைத் தொட்டியில்தூக்கி போட்டுவிட்டது.

நீட் தேர்வு என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பது கடந்த ஆண்டு முழுமையாக வெளிச்சத்திற்கு வந்தது. வடமாநிலங்களில் நடத்தப்படும் பயிற்சி மையங்கள் மூலம் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்தனர். பின்னர் இந்த மோசடி வெளிவந்த நிலையில், மாணவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, அந்த மோசடி தனியார் பயிற்சி மையங்கள் தொடர்ந்து தங்களதுவேலையை காட்டி வருகின்றன.தமிழக அரசைப் பொறுத்தவரை நீட் தேர்வில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதுகின்றனர். அதை நடைமுறைப்படுத்த  எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10சதவீத உள் ஒதுக்கீடு என்று மாநிலஅரசு முடிவு செய்தது நல்லவிசயம். ஆனால் இதை சட்டமாக்க இந்தக் கூட்டத்தொடரிலாவது விடிவு கிடைக்குமா என்று தெரியவில்லை.

மாநில பாடத்திட்டத்தின்கீழ் பெரும்பாலான தமிழக மாணவர்கள் படிக்கும் நிலையில் மத்திய பாடத்திட்டத்தின்கீழ் தேர்வு நடத்தப்படுவது அப்பட்டமான அநீதியாகும். கல்வியை மாநிலப்பட்டியலில் முழுமையாக கொண்டுவர வேண்டும் என்பதும் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதும் தமிழகம் ஒருமித்தக்குரலில் எழுப்ப வேண்டிய கோரிக்கையாகும்.
 

;