headlines

img

பிடிவாதத்தின் பின்னணி....

மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுத்து மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது என்று விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 

இந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை வீட்டுக்கு திரும்பிப் போவதில்லை என்று உறுதிபட அறிவித்துள்ள விவசாயிகள் ஜெய்ப்பூர், தில்லி, ஆக்ரா நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம்நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்தசட்டத்தின் பின்னால் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி போன்றவர்களின் நிறுவனங்களுக்கு எதிராக போராடவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளது போராட்டத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை என்பது கேள்விக்குறியாகும், ஒப்பந்த முறை என்ற சுரண்டல் முறைக்குள் விவசாயிகள் சிக்க வைக்கப்படுவார்கள். மாநில அரசுகள் நடத்தும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இல்லாமல் போகும். விவசாயத் துறை என்பதுமாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு முற்றிலும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் வேளாண் சந்தை ஒப்படைக்கப்படும் என்பதுதான் போராடும் விவசாயிகளின் அச்சம். இதற்கு ஒரே தீர்வு விவசாயசட்டங்களை ஒட்டு மொத்தமாக ரத்து செய்வதுதான்.

ஆனால் விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்களை சட்டமாக்கிவிட்டு அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்க உத்தரவாதம் வழங்குவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவது வெறும் ஏமாற்று வேலையே. இவர்கள் ஒருபோதும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இல்லை. மாறாக கார்ப்பரேட் முதலாளிகளுடன் போட்டுக் கொண்ட ரகசியஉடன்பாடுகளைத்தான் தொடர்ந்து சட்டமாக்கி வருகின்றனர்.15 நாட்களுக்கு மேலாக கடும் குளிரில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகநாடு முழுவதும் போராட்டப் பேரலை சுழன்று அடிக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியரசுத் தலைவரை சந்தித்து இந்த சட்டங்களை ரத்துசெய்ய வேண்டுமென மனு கொடுத்துள்ளன.

ஆனால் மோடி அரசு இந்தளவுக்கு பிடிவாதமாக இருப்பதன் நோக்கம் வெளிப்படையானது. கார்ப்பரேட் முதலாளிகளை பகைத்துக் கொள்ள அவர்கள் தயாராகயில்லை. இந்திய வேளாண்சந்தையில் ஏறத்தாழ 16லட்சத்து 58 ஆயிரத்து 700 கோடிரூபாய் புரள்வதாக கணிக்கப்பட்டுள்ளது. தொலை தொடர்பு, ரயில்வே, விமான போக்குவரத்து என ஒவ்வொன்றாக கபளீகரம் செய்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளும், பன்னாட்டுநிறுவனங்களும் இந்திய விவசாயத்தை ஒட்டுமொத்தமாக தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்து விட்டனர். அவர்களுக்கு அனுசரணையாகவே இந்த மூன்று சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும்மேலும் கொடூரமாக உயரும் வாய்ப்புள்ளது.இதை எதிர்த்தே இந்த போராட்டம். உழுகுடிகளின் இந்த போராட்டத்திற்கு இந்திய குடிகள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

;