headlines

img

 சிவசங்கர் கைது - போலிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்....

பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள சிவ சங்கர்பாபா என்ற போலிச் சாமியார் தில்லியில் தமிழகசிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாறுவேடத்தில் பதுங்கியிருந்த நிலையில்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இதனிடையே சிவசங்கர் பாபா நடத்தி வந்த சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யசென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்தப் பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.சிவசங்கர் பாபா மீது அந்தப் பள்ளியில் படித்தமுன்னாள் மாணவிகள் அளித்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சாமியார் மற்றும்பள்ளி நிர்வாகி என்ற முறையில், அருவருக்கத்தக்கவிதத்தில் பள்ளியில் பயிலும் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு தேடப்பட்டு வந்தார். அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் டேராடூனில் சிகிச்சை பெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் தொடர்புடைய வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் அவர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார்களை தொடர்ந்து வேறு சில பள்ளி ஆசிரியர்கள் மீதும் புகார்கள் எழுந்தன. இந்த பின்னணியில் சிவசங்கர் பாபா குறித்து அந்தப் பள்ளியில் பயின்ற மாணவிகள் தொடர்ந்து புகார்அளித்தனர். அந்த புகார்கள் தொடர்ந்து எந்தளவுக்கு பாலியல் தொல்லைகளுக்கு மாணவிகள் இவரால் ஆட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக்குகிறது.

ஒரு சாதாரண நபராக இருந்த சிவசங்கர் ஆன்மீக போர்வையில் தம்முடைய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளார். ரியல் எஸ்டேட் பின்னணியுடன் செயல்பட துவங்கிய இவருக்கு ‘பெரிய’மனிதர்கள் தொடர்பு ஏற்பட்டது. ஒருநிலையில் இவர் தன்னைத்தானே கடவுள்  என்று கூறத் தொடங்கியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இவர் மீதுபாலியல் புகார்களும், ஆட் கடத்தல் புகார்களும் கூறப்பட்டன. ஆனால் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்துள்ளார்.கேளம் பாக்கத்தில் இவர் உருவாக்கிய தனியார்உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகள் இவரதுவக்கிரம் குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். மாணவிகளின் எதிர்காலத்தை அழித்துவிடுவதாக மிரட்டி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது  அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் மீது புகார் அளித்துள்ள முன்னாள் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அவர் நடத்தி வந்தபள்ளியை அரசே ஏற்று நடத்த வழிவகை செய்ய வேண்டும். ஆன்மீகக் போர்வையில் ஒளிந்து கொண்டு அட்டகாசம் செய்யும் போலிச்சாமியார்கள் அனைவரையும் கண்காணித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.