1940களில் 1950களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு நிறைய கருத்துக் கொடைகள் கிடைத்தன. குடும்பம், பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள், அரசியல் என பல்வேறு திசைகளிலிருந்தும் அலை அலையாகக் கருத்துக்கள் வரவும் செலவு மாக இருந்தன. அதிலும் குறிப்பாக நடுத்தர குடும்பங்களில் ஒழுக்கம், ஆன்மிகம், அரசியல், நாட்டுப்பற்று போன்ற கருத்தாக்கங்கள் கூடுதலாக இருக்கும். ஒற்றையடிப் பாதையைத் தேர்வு செய்து நடக்காமல், பல வழிகளில் பயணம் செய்து ஒரு வழியைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது எனலாம்.இப்போது 60 வயதைத் தாண்டி இருப்பவர்க ளிடம் சுய வரலாறு பற்றி பேச்சுக் கொடுத் தால் இதனை உணரலாம். மற்றவர்களுக்கு எப்படியோ நான் அறிந்தவரை இப்படித் தான் இருக்கிறது. எனது எண்ணத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக இருக்கிறது சிகரம் ச.செந்தில்நாதன் அவர்களின் முழு நீள நேர்காணல். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சுதே சமித்திரன், கல்கி, கல்கண்டு, பொன்னியின் செல்வன் பற்றி அறிந்து படித்திருக்கும் வாய்ப்பு, பெரியார் காமராஜர் எனும் அரசியல் ஆளுமைகளின் மீதான ஈர்ப்பு, எம்ஜிஆரை விலக்கி சிவாஜி கணேசன் திரைப்பட ரசிப்பு என்பதெல்லாம் கருத்து சேகரிப்புக் களங்களாகின்றன. விதவித மான கேட்புகளும் வாசிப்புகளும் பார்வை களும் அறிவை விசாலப்படுத்தும் என்பதற்கு அடையாளமாகத் தெரிகிறார் ‘சிகரம்’. கலைஞரின் பராசக்தி திரைப்பட வசன மனப்பாடம் என்பது இவரது முற்போக்கு விளைச்சலின் முளையாகத் தெரிகிறது. இந்த முளை வேர்விட்டு வளரும்போது பற்றிய கொழுக்கொம்புகளாக டி.செல்வராஜ், தி.க.சிவசங்கரன் போன்ற பொதுவுடைமை ஆளுமைகள் வாய்த்ததை சிகரம் பெருமிதத்தோடு பதிவுசெய்கிறார். ஒருபக்கம் பெரியாரியம் மறுபக்கம் மார்க்சியம் என பயணப்பாதை தென்பட்டா லும் சமூகம் கடைத்தேற மார்க்சியம் மிக முக்கியமானது எனத் தேர்வு செய்து கொண்டுள்ளார். எல்லாம் மாற்றத்துக்கு உட்பட்டது என்பது மார்க்சிய அடிப்படை அல்லவா? உலகின் பல பகுதிகளிலும் பரிணமிக்கும் மார்க்சிய சிந்தனைகளை அவர் உள்வாங்கிக் கொண்டது அவரின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது. ‘மே தின வரலாறு’ எழுதிய அவரது பேனாவே “ஆண்டவன் ஆன்மீகம் நீதிமன்றம்” என்பதையும் எழுதுகிறது. “தேவாரம் ஒரு புதிய பார்வை” என சிந்திக்கும் அவரே ‘மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்’ என்பதை யும் எழுதுகிறார். இதையெல்லாம் இந்நூல் வேறு வேறு தளங்களில் விளக்குகிறது. கையெழுத்து ஏட்டில் தொடங்கி இவரின் எழுத்து வரலாறு ‘சிகரமாக’ உயர்ந்தது எப்படி என்பதையும் -- ‘இலக்கிய சங்கம்’ நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்தவர் ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ நிறுவி அதனைக் காலத்தின் தேவைக்கேற்ப‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தில் இணைத்தது பற்றியும் --- ஜெயகாந்தன் என்ற எழுத்து ஆளுமையை வியந்து எழுத்துக்கான வழிகாட்டிகளில் ஒருவராக ஏற்றுக் கொண்டாலும் அவரின் சறுக்கல்களை முதலில் அம்பலப்படுத்தியவராக இருந்தது பற்றியும் நேர்காணல் சுவைபட சொல்கிறது. அரசியல் தலைவர் என்பதற்கு அப்பால் , தமிழால் தன்னைக் கவர்ந்தவர் கலைஞர் கருணாநிதி எனும் அதே போழ்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தன்னேரில்லாத் தலைவரான கே.முத்தையாவின் வழிகாட்டுதலையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. எழுத்தாளராகப் பிரபலமாயிருக்கும் அதே தருணத்தில் வழக்கறிஞராகவும் சிறந்து விளங்குகிறார். இரண்டும் இரண்டு சக்கரங்களாக இவரது வாழ்க்கை வண்டியை இயக்கி வருகின்றன. வழக்கறிஞராக இருந்து என்.ஆர்.தாசன், சு.சமுத்திரம் போன்ற நண்பர்களை அடைந்த நெகிழ்ச்சியான தருணங்களைப் பதிவு செய்திருக்கும் நூல், பெருமாள் முருகன் தொடர்பான வழக்கில் வெற்றி பெற்றது தமக்குப் பெருமிதம் என்று சிகரம் கூறுவதையும் சுட்டிக்காட்டுகிறது. வழக்கறிஞர் தொழிலில் தமக்கு முதன்முதலில் உதவியாளராகச் சேர்ந்த அரிபரந்தாமன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றிருப்பதைத் தமது பதவிபோல் மகிழ்ந்து கூறுவதிலும் மேலும் 28 பேர் தம்மிடம் உதவியாளர்களாக இருந்து உயர் பதவிகளில் இருப்பதைப் பெருமையாக சொல்வதிலும் அவரது பண்பாட்டின் வெளிச்சத்தைக் காணமுடிகிறது. தமுஎகச - வில் தலைவராக இருந்த காலங்கள் - நடத்தப்பட்ட இயக்கங்கள் - எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் இணைத்த பாங்கு, எழுத்து - படைப்பு உரிமைகளுக்கான போராட்டங்களில் கிடைத்த வெற்றி என்பதெல்லாம் நூலில் நயம்பட சொல்லப்பட்டுள்ளன. வாய்மேடு என்ற குக்கிராமத்தில் 1940 களில் செந்தில்நாதனாகப் பிறந்து பின்னர் படிப்படியாக சிகரம் செந்தில்நாதனாக உயர்ந்ததன் நினைவுகளை நேர்காணலில் மலர்த்தியிருக்கிறார் - பூ.முருகவேள். இவரும் ஒரு வழக்கறிஞர் என்பது கூடுதல் சிறப்பு. படைப்பாளியின் வாழ்க்கைத் தடங்களைப் பதிவிடுவது எதிர்காலத் தலைமுறையின் பயணத்திற்குப் பயன்படும் என்ற உணர்வுடன் தமுஎகச அறம் கிளை இந்த சீரிய பணியை செய்துள்ளது. இதற்குப் பாராட்டுக்கள்.
பிடித்ததை மட்டுமே எழுதுவதற்கு
நான் பிழைப்புவாதி அல்ல
சிகரம் ச. செந்தில்நாதன்
அவர்களுடன் நேர்காணல்
சந்திப்பு : பூ. முருகவேள்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை -18
பக்: 104 விலை: ரூ. 100/-
தொலைபேசி: 044-24332924