headlines

img

இந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரைவார்க்காதே - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மோடி-2 அரசாங்கம், தனியார்மயம் நோக்கி பாய்ச்சல் வேகத்தில் செல்லக்கூடிய விதத்தில் முடுக்கிவிடப் பட்டிருக்கிறது. ஏற்கனவே, நிதிஆயோக், ஒரு நூறுநாள் நடவடிக்கைத் திட்டத்தின்படி 46 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்திட அல்லது மூடிவிடப் போவதாக அறிவித்திருக்கிறது.

இதில் மிகவும் முக்கியமான பகுதியாக இருப்பது இந்திய ரயில்வேயாகும். ரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ள நடவடிக்கைத் திட்டத்தின்படி, நூறு நாட்களுக்குள்ளாக தனியார் கட்டுப்பாட்டில் பாசஞ்சர் ரயில்கள் ஓடத் தொடங்கிவிடும். இதில் இரண்டு பாசஞ்சர் ரயில்களை, ரயில்வேயின் தற்போதைய துணை அமைப்பாகச் செயல்பட்டுவரும், ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்திடம், டிக்கெட்டுகள் வழங்குதல் மற்றும் அவற்றின் ஒட்டுமொத்த சேவைகளுடன் ஒப்படைத்திட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரயில்கள் பெருநகரங்களை இணைத்திடும் இலாபம் அதிகமான அளவில் ஈட்டப்படும் மிகவும் முக்கியமான மார்க்கங்களில் ஓடும். ரயில்வேத்துறையின் மிகவும் முதன்மையான ரயில்களாக விளங்கும் ராஜ்தானி மற்றம் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களையும்கூட தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம் விரும்புகிறது.    இவற்றுக்கான டெண்டர்கள் இந்த ஆண்டே வெளியிடப்பட இருக்கின்றன.

இதன்மூலம், நாட்டில் அதிக அளவில் இலாபம் ஈட்டும் முதன்மையான மார்க்கங்களில் ஓடும் ரயில்களும், பெருநகரங்களில் ஓடும் ரயில்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பின்னர், தற்போது இந்த மார்க்கங்களில் அரசாங்கத்தின் தரப்பில் அளிக்கப்பட்டுவரும் மான்யங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுவிடும். அதன்பின்னர், இவற்றின் கட்டணங்கள் மிகவும் உச்சத்திற்கு உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஏற்கனவே, மோடி-1 அரசாங்கத்தின் காலத்திலேயே, பல்வேறு ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைத்திட திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன. மேலும், ரயில்வேக்குச் சொந்தமான நிலம் போன்று மிகவும் மதிப்புள்ள சொத்துக்களைத் தனியாரிடம் வணிகப் பயன்பாட்டிற்காக ஒப்படைப்பதற்கும் அரசாங்கம் முடிவெடுத்து, அவற்றைச் செயல்படுத்திக்கொண்டுமிருந்தது.

இப்போது, ரயில்வேயின் ஏழு உற்பத்திப் பிரிவுகளையும் அதனுடன் இணைந்த பணிமனைகளையும் இந்திய ரயில்வேயிடமிருந்து கழட்டி, தனியே ஒரு நிறுவனத்தின்கீழ் கொண்டுவர முன்மொழிவு அனுப்பப்பட்டிருக்கிறது. இது, இவற்றைத் தனியாரிடம் தாரைவார்ப்பதை நோக்கி, எடுத்து வைக்கப்படும் முதல் அடி(first step)யாகும். பின்னர் இவற்றில் உற்பத்திகள் ‘அவுட்சோர்சிங்’ முறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

இந்திய ரயில்வே, தற்போது நாட்டின் ஒற்றுமையின் குறியீடுபோன்று, 69,182 கிலோமீட்டர் அளவிற்கு நாட்டின் நீள – அகலத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் கோடானு கோடி சாமானிய மக்களை, நாட்டின் பல முனைகளிலிருந்தும், நாள்தோறும் ஏற்றிச் சென்று கொண்டிருக்கிறது.

ரயில்வே அமைப்புமுறை, இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்னர், இந்தியாவில் பல்வேறு மண்டலங்களில் பல்வேறு தனியார் ரயில்வே கம்பெனிகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. சுதந்திரத்திற்குப் பின்னர் தான் அனைத்து ரயில்வே கம்பெனிகளும் தேசிய மயமாக்கப்பட்டன. இப்போது, மோடி அரசாங்கம், இதனை மீண்டும் காலனியாதிக்கக் காலத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறது.

இவ்வாறு மத்திய அரசு, இந்திய ரயில்வேயைச் சின்னாபின்னமாக்கித் தனியாரிடம் தாரைவார்ப்பதன் மூலமாக, இந்திய ரயில்வேயின் மூலமாக ஒன்றுபட்டிருக்கும் இந்திய வலைப்பின்னலையே ஒழித்துக்கட்டத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும், இந்திய ரயில்வே நாட்டின் பெரும்பகுதி ஏழை மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் உதவி வரும் ஒரு போக்குவரத்தாக இதுவரை திகழ்ந்து வருகிறது. நாட்டிலுள்ள போக்குவரத்துகளில் மிகவும் குறைந்த கட்டணத்துடனான போக்குவரத்து இதுவரையிலும் இதுவேயாகும். அதன்காரணமாக கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்களின் உயிர்நாடியாகவும் இருந்து வருகிறது.

இவ்வாறு ஏழை மக்களின் மிகவும் முக்கியமான போக்குவரத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதன் மூலம், நாட்டில் பெரும்பகுதி ஏழை மக்களின் வயிற்றில் அடித்து தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட மத்திய அரசு வழிவகை செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் இருப்பதுபோல ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் மிகச்சிறந்த ரயில் போக்குவரத்து முறை அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவைகளேயாகும். முப்பதாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனில் ரயில்வே போக்குவரத்து தனியாரிடம் தரப்பட்டது. இதன் விளைவு, பயணிகளுக்கு மிகவும் கேடு பயப்பதாக அமைந்தது. டிக்கெட்டுகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்தன, குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் வருவதில்லை, அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு ரயில் போக்குவரத்துகள் தடைபட்டன. விபத்துகள் என்பவை நாளும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறிப் போயின. அதனால், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மக்களின் கருத்துக் கணிப்பில் 73 சதவீத மக்கள், ரயில்வேயை பிரிட்டனில் மீளவும் அரசுடைமையாக்க வேண்டுமென்று வாக்களித்தனர்.

இந்திய ரயில்வே தனியார்மயப்படுத்தப்படக் கூடாது. அரசின் பொதுத்துறை  நிறுவனமான ரயில்வேயைப் பாதுகாப்பதை, மக்களின் ஆதரவுடன் பெரிய அளவிலான பிரச்சனையாக ஏற்படுத்திட வேண்டும். அரசின் இம்மோசமான நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் அனைத்தும் முடுக்கிவிடப்பட வேண்டும். ராபரேலியில் உள்ள நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலை தொழிலாளர்களும், வாரணாசியில் உள்ள டீசல் லோகோமோடிவ் வொர்க்ஸ் தொழிலாளர்களும் இவற்றைக் கார்ப்பரேட் மயமாக்கிட அரசு மேற்கொண்டுள்ள முடிவுகளை எதிர்த்து வேலைநிறுத்தம் மேற்கொள்ள விருக்கிறார்கள்.

ஆனால், இந்தப் பிரச்சனை, தொழிற்சங்கங்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று மட்டுமல்ல. இந்திய ரயில்வேயைப் பாதுகாப்பதற்கும், இந்திய சமூகத்தில் ரயில்வேயின் கேந்திரமான பங்களிப்பினைப் பாதுகாப்பதற்கும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்பவேண்டியதும் அவசியமாகும்.

(ஜூலை 3, 2019)

தமிழில்: ச. வீரமணி