குடியரசுத் தலைவர் உரை என்ற பெயரிலும்,பொருளாதார ஆய்வறிக்கை என்ற பெயரிலும் மோடி அரசு தனக்குத் தானே சுய பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டது. அதன் நீட்சியாகஇன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் - ஊரடங்கு காலத்தில் ஒட்டுமொத்த நாடும் அனுபவித்த பொருளாதார துயரத்தை ஒரு பொருட்டாக கூட மோடி அரசு கணக்கில் கொள்ளவில்லை. மாறாக, வளர்ச்சி என்பதற்கும், வறுமை ஒழிப்பு என்பதற்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் என்பதற்கும் புதிய புதிய வியாக்யானங்களை அளித்திருக்கிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒழிந்து விட்டால் மட்டும் வறுமை ஒழிந்துவிடாது என்று கூறியிருக்கும் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, இது பெரும் கோடீஸ்வரர்களின் அரசு என்பதை அப்பட்டமாக ஒப்புக் கொள்கிறது. குறிப்பிட்ட சில மகா கோடீஸ்வரர்கள் மேலும் மேலும் செல்வத்தை குவித்துக் கொண்டே இருப்பதை மிகவும் இயல்பானது என்று குறிப்பிடுகிற பொருளாதார ஆய்வறிக்கை, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம்கோடி ரூபாய் வராக்கடன் தள்ளுபடி அளிப்பதையும், கணக்கே இல்லாத அளவிற்கு கார்ப்பரேட்டுகளுக்கு மானியம் வாரி வழங்குவதையும், அவர்கள் மீது செல்வ வரி விதிக்காமல் இருப்பதையும் பகிரங்கமாக நியாயப்படுத்துகிறது.
கொரோனா காலத்திற்கு முன்பே, கடுமையான வீழ்ச்சியை சந்தித்து, கொரோனா ஊரடங்குகாலத்தில் அழிவின் விளிம்பில் நிற்கிற சிறு, குறு, நடுத்தர தொழில்கள், அவற்றில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஏழை, எளிய இந்தியர்களை பற்றி கடுகளவு கூட கவலை கொள்ளாத மோடி அரசு, ஊரடங்கு காலத்தில் மைனஸ் 7.7 சதவீதம் என்ற அளவிற்கு இந்தியப் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியது. அதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதற்கு எந்தவிதமான திட்டத்தையும் முன்வைக்காமல் திடீரென வரும் நிதியாண்டிலேயே 11 சதவீதம் வளர்ச்சி அடைந்துவிடுவோம் என்று ஆய்வறிக்கை மூலமாக கூறியிருப்பது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் முட்டாளாக்குவதாகும்.
கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு விதவிதமான திட்டங்களை அறிவித்தது மோடி அரசு. இந்த திட்டங்களின் பலன்கள் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு சிறு அளவுக்கு கூட சென்றடையவில்லை என்று பல்வேறு புள்ளி விபரங்கள் வெளியாகிவிட்டன.தொழில் முடக்கம், விலை உயர்வு, வேலை பறிப்பு என அனைத்து பக்கங்களிலும் தாக்குதலுக்கும் நெருக்குதலுக்கும் உள்ளாகியிருக்கும் மக்களின் அன்றாட வாழ்வைப் பற்றி துளியும் கவலை கொள்ளாத பொருளாதார ஆய்வறிக்கை, மோடி அரசின் இன்றைய பட்ஜெட்டும் தனது கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு நாட்டின் அனைத்து வளங்களின் கதவுகளையும் திறந்துவிடும் வகையிலேயே அமைய போகிறது. இந்தப்பின்னணியில்தான், குடியரசுத் தலைவர் உரை உள்ளிட்ட நிகழ்வுகளை நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்தார்கள். இந்த புறக்கணிப்பு மோடி அரசுக்கு ஓர் எச்சரிக்கை.