headlines

img

ஆன்மாவை சிதைக்கலாமா?

திங்களன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா  அவை நடவடிக்கைகளில்பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமென பல்வேறு கட்சிகளின் தலைவர்க ளும் வலியுறுத்தினர். ஆயினும் அதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவைத் தலைவரும் மத்திய அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கடந்த ஆகஸ்ட் ஐந்து அன்று காஷ்மீர் மாநி லத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது பிரிவை ரத்து செய்ததையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள் மட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரிகள் கூட சிறை வைக்கப்பட்டுள்ளனர். நூறு நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லை.

எனவே நாடாளுமன்றத்தின் உறுப்பினராக உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மக்களவை நடவடிக்கையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதே அம்மாநிலத் தின் ஜனநாயக, சட்டப்பூர்வ உரிமைகளை மதிப்ப தாக அமையும். அதற்கு நாடாளுமன்ற மக்கள வைத் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.

ஆனால் காஷ்மீர் மாநிலம் இயல்பாக இருப்ப தாக வெளி உலகிற்கு காட்டிக் கொள்வதற்காக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து ஒரு காட்சி நாடகத்தை மத்திய அரசு நடத்தியது. ஆயினும் அவர்கள் கூட அரசின் கூற்றுக்களை முழுமையாக நம்ப வில்லை என்பதை தெரிவித்துச் சென்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதன் 250ஆவது கூட்டத்தொடரில் உரை யாற்றிய பிரதமர் மோடி மாநிலங்களவை இந்திய கூட்டாட்சி அமைப்பின் ஆன்மாவாக விளங்குகிறது என்றும் வேற்றுமையில் ஒற்றுமையை இந்த அவையில் பார்க்கலாம் என்றும் பன்முகத் தன்மையே மாநிலங்களவையில் பலமாக உள்ளது என்றும் கூறி பெருமைப்பட்டிருக்கிறார். 

ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை வேரறுக்கும் வகையிலான நடவடிக்கைகளிலேயே அவரது அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந் தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதே சங்களாக ஆக்கப்பட்டதே அதற்குச் சான்று. 

அம்மாநிலத்தின் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத அவலநிலையே உள்ளது. ஆனால் மத்திய அரசோ காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று பீற்றிக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கையான ஆப்பிள் விற்பனை கூட பெருமளவு சரிந்துவிட்டது. ஏனெனில் இணையதளம் மூலமாகவே ஆப்பிள் விற்பனை நடந்து வந்தது. 

தற்போது இணையதளச் செயல்பாடு முடக்கப் பட்டுவிட்டதால் ஆப்பிள் விவசாயிகளின் வாழ்வாதாரமும் முடங்கியே கிடக்கிறது. எனவே காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்ப சிறை வைக்கப் பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்வதும், முடக்கி வைக்கப்பட்டுள்ள தொலை தொடர்பு வசதியை செயல்படுத்துவதும் உடனடித் தேவையாகும்.