headlines

img

இயலாமை ஏற்படுத்தும் ஆத்திரத்தில் அத்துமீறுவதா?

பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயது கல்லூரி மாணவி தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவரை ஐந்து நாள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அராஜகமும், அடக்குமுறையும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைஎதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் அயர்வற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை மத்தியஅரசு ஏற்க மறுத்து அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயன்று தோற்றுவிட்டது. இந்தநிலையில் போராடும் விவசாயிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தும் மத்திய அரசின் முயற்சியும்வெற்றி பெறவில்லை. அவர்களது தேசபக்த போராட்டத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டாதன்பர்க் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்ததோடு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘டூல்கிட்’ என்ற செயலியையும் பகிர்ந்திருந்தார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து அதில் விவரிக்கப்பட்டிருந்தது. பெங்களூரைச்சேர்ந்த  திஷா ரவி இந்த செயலியை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததுதான் ஆகப் பெரிய குற்றம் என்று தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத மத்தியஅரசு பல்வேறு வழிகளில் தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறது.

சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் வேளாண் மக்களின் போராட்டத்திற்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு எதிராகஅரசு இந்திய அளவில் பிரபலமான சிலரை பிடித்து நிர்பந்தம் செய்து போராட்டத்திற்கு எதிரான பதிவுகளை வெளியிடச் செய்து வருகிறது. இதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றால், விவசாயிகளை ஆதரிப்பது தேசத் துரோக குற்றம் ஆகிவிடுமா?

கல்லூரியில் படிக்கும் ஒரு இளம் மாணவி மீது இவ்வளவு வன்மத்தோடு அரசு நடந்து கொள்வதும் அவருக்கு காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தோடு தொடர்பு இருக்கிறது என்று அவதூறுபரப்புவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. அவரை கைது செய்தபோது குறைந்தபட்ச சட்ட நடைமுறைகள்கூட பின்பற்றப்படவில்லை. பெங்களூரு போலீசாருக்கு கூட தெரிவிக்காமல் சம்மன் இல்லாமல் அவரை கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளக்கூட அனுமதிக்கப்படவில்லை. மோடி அரசுக்கு எதிரான மக்களின் கோபமும்,அதிருப்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறைந்தபட்ச மனித உரிமைகளைக் கூட பின்பற்றாமல் அரசை எதிர்ப்பவர்களை வேட்டையாட முயல்
வது ஜனநாயகத்தை முற்றிலும் இழிவுபடுத்துவதாகும். திஷா ரவி கைதைக் கண்டித்து ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் வலிமையாக குரல் எழுப்ப வேண்டும்.