மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. கொரோனா காலத்திலும் கூட அது நிற்கவில்லை. தொடர்ந்து சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய எரிப் பொருட்களின் விலை மிக கடுமையாக உயர்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது. இதில் நரேந்திர மோடி அரசு இமாலய சாதனை நிகழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.ஏழை மக்களுக்காக இலவசமாக எரிவாயு இணைப்பு கோடிக்கணக்கில் வழங்கியுள்ளதாக அவ்வப்போது பெருமிதத்துடன் மத்திய அரசால் விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையும் மாதந்தோறும் மட்டுமின்றி வாரந்தோறும் என்ற கணக்கில்விலையேற்றப்படுவது வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மானியமில்லாத சிலிண்டர் விலை இரண்டுமுறை தலா ரூ.50வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இம்மாதத்தில் கடந்த 4ஆம் தேதி ரூ.25 ம், 15ஆம் தேதி ரூ.50 ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படியாக கடந்தமூன்று மாதங்களில் 175 ரூபாயை உயர்த்தி வீடுகளில் எரியும் அடுப்புகள் மீது மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது மத்திய அரசு. ஏற்கெனவே மானியம் உள்ள சிலிண்டர்களின் விலையும் அவ்வப்போது உயர்த்தப்பட்டுக் கொண்டேஇருக்கிறது. ஆனால் மத்திய அரசு வழங்கும்மானியம் குறைக்கப்பட்டு குறைக்கப்பட்டு பெயருக்காக 25 ரூபாய் என்றளவுக்கே வழங்கப்படுகிறது. அதே நேரம் சில சமயங்களில் மானியத் தொகைவங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதுமில்லை. எப்போதாவது போனால் போகிறது என்று பெயரளவுக்கே செலுத்தப்படுவது நடைபெறுகிறது.ஏற்கெனவே பெட்ரோல், டீசல் ஆகியவை தினந்தோறும் விலை உயர்த்தப்பட்டு நூறு ரூபாயைநோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகுந்தபாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆனாலும் கூட மத்திய அரசாங்கம் மிக இன்றியமையாத பொருட்களான எரி பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. எண்ணெய் நிறுவனங்கள் இஷ்டம் போல விலையை உயர்த்தி கொள்ளை லாபம் பெறவே வழி வகுத்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்விலை மிகவும் குறைந்தாலும் கூட இங்கு விலைக்குறைப்புச் செய்யப்படுவதில்லை. அப்பொழு தெல்லாம் வரிகளை போட்டு விலையை நிலைப்படுத்தவும், நிறுவனங்களின் லாபம் குறையாமல் பார்த்துக் கொள்வதிலுமே அரசு கவனம் செலுத்துகிறது. தனியார் நிறுவனங்களின் மீது கரிசனம் காட்டும் அரசு ஏழை, எளிய மக்களின் இல்லங்களில் அடுப்பு எரிவதற்கு உதவிட எத்தகைய நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. ஏழை மக்களின் உள்ளம் குளிர நடவடிக்கை எடுக்காவிட்டாலும் கூட மேலும் மேலும் விலைகளை உயர்த்திஅவர்களின் நெஞ்சங்களில் எரியும் நெருப்பில்மேலும் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம். அதுஉங்களது அரசையே எரித்துவிடும் என்பதை மறந்து விட வேண்டாம்.