நெரிபடும் ஜனநாயகக் குரல் வளை!
அமெரிக்காவில் உயர்கல்வியின் அடையாள மாக விளங்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இன்று சுதந்திரச் சிந்தனையின் சோதனைக் களமாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வந்த 2.3 பில்லியன் டாலர் நிதியை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிறுத்தியிருக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம், காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக் கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்; போராடுகிறார்கள்; குறிப்பாக இடதுசாரி சார்பு கண் ணோட்டங்களை அந்த பல்கலைக்கழகம் கட்டுப் படுத்தத் தவறிவிட்டது; அதனால் நிதியை நிறுத்து கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
கல்வி நிறுவனங்கள் சமூகத்தின் “எதிர்கால சிந்தனையின் ஆய்வகங்கள்”. இவை அனைத்து கருத்துக்களையும் விவாதிக்கும் இடங்களாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட அர சியல் சார்பை (அதிதீவிர வலது கருத்தியலை) மட்டுமே முன்னிறுத்த அரசு அழுத்தம் கொடுப் பது, இந்த சமநிலையைச் சீர்குலைக்கும்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத் தலைவர் ஆலன் கார்பர் இதை எதிர்த்து, “பல்கலைக்கழகங்கள் இதை மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று அர சாங்கம் முடிவு செய்யக் கூடாது. அரசின் தலை யீடு கல்வி சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது” எனக் கூறியிருக்கிறார். பல்வேறு கல்வியாளர்களும் டிரம்ப்பின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரி வித்து வருகின்றனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகம் பொதுவாகத் தனிப்பட்ட கல்வி சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் மதிக்கும் ஒரு இடமாக இருந்து வருகிறது. குறிப்பாகச் சிறந்த அறிவுசார் உரிமை களை, தனிநபர் சிந்தனைகளை- ஜனநாயகத் தின் அடிப்படை மதிப்பீடுகளைப் பாதுகாக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. ஆனால் தற்போது அதிதீவிர வலதுசாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வலதுசாரி கோணத்தில் மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஜனநாயகத்தின் உயிர் மூச்சான சுய சிந்தனையின் குரல் வளையை நெரிப்பதாகும்.
டிரம்ப் உலக நாடுகள் மீது தானடித்த மூப்பாக வரிகளை விதித்திருப்பது, சோசலிச நாடுகளைக் குறிவைத்து பொருளாதாரத் தடைகளை தீவிரப் படுத்தி வருவது, காசா போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களின் விசா ரத்து, கைது முயற்சிகள் போன்றவை கருத்து வேறுபாடுகளைச் சகித்துக் கொள்ள மறுப்பதன் வெளிப்பாடே ஆகும். இது அமெரிக்கா முன்வைக்கும் அடிப்படை ஜனநாய கத்திற்கே நேர் முரணானது.
அமெரிக்க ஜனநாயகம் உண்மையில் உயி ருடன் இருக்க வேண்டுமெனில், அதற்கு முதலில் அறிவுப் பூர்வமாக, சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு இடமளிக்க வேண்டும். ஹார்வர்டு மீது விழும் அதி தீவிர வலதுசாரி கருத்தியல் அழுத்தம், நாளைய சமூகத்தின் மீது விழும். இது ஓர் உயர் கல்வி நிலை யத்தின் சுதந்திரத்துக்கான போரல்ல, மக்கள் சிந்திக்கவல்ல உரிமைக்கான போர்.