தமிழக பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊடுருவியிருக்கின்றன. இவ்வமைப்பின் மூலம் மாணவர்களை மதரீதி யாக பிளவுபடுத்தி மதக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி தீவிரமடைந்திருக்கின்றன. இந்நிலையி லேயே இதன் ஆபத்தை உணர்ந்து இந்த அமைப்பு களை கண்காணித்து தடுத்து நிறுத்தும்படி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதனை திடீரென தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே தென்மாவட்ட பள்ளிகளில் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கையில் வண்ணக் கயிறுகளை கட்டி அதன் மூலம் மாணவர்களிடையே மோதலை உருவாக்க முயன்றனர். சில இடங்களில் மோதலும் நடை பெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை கையில் கயிறு கட்டுவதன் மூலம் சாதியத்தை வெளிப் படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியது.
உடனே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கையில் கயிறு கட்டுவது இந்து மத நம்பிக்கை; அதை அகற்ற சொல்வது இந்து விரோத செயல் என மிரட்டினார். அதைத்தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ சுற்றறிக்கை குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதோடு, கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போல் அதிலிருந்து நழுவிச்சென்றார். தற்போது வரை அந்த சுற்றறிக்கை நடைமுறையில் இருக்கிறதா இல்லையா என்பது கூட தெளிவு படுத்தப்படவில்லை. ஆனால் நீட் நுழைவு தேர்வின் போது மாணவ, மாணவியரின் கையில் கட்டியிருந்த கயிற்றை மட்டுமல்ல, கழுத்தில் கடவுள் படத்துடன் அணிந்திருந்த கயிறுகளையும் அகற்றினர். மூக்குத்தி, கம்மலையும் கூட விட்டுவைக்க வில்லை. அப்போது அதை ஆதரித்தவர்கள் எச். ராஜா உள்ளிட்ட சங்பரிவார் வகையாறாக்கள் தான். இவர்களின் உண்மையான நோக்கம் மதத்தின் பேரில் மக்களை கூறு போட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
தமிழகத்தின் பல பள்ளி, கல்லூரிகளில் ஆர்எஸ்எஸ் முகாம் என்ற பெயரில் மதவெறிக்கு தூபம் போடும் நிகழ்வுகள் ஒரு புறம் அரங்கேறி வருகின்றன. மறுபுறம் சங்பரிவாரின் இதிகாஸ் சங்களான் சமீதி என்ற அமைப்பிற்கு அரசே ஆசிரியர்களை திரட்டி வரலாற்று திரிபுகளை வர லாறாக சொல்லிக்கொடுக்கும் நிகழ்வு நடை பெற்று வருகிறது. இது தமிழகத்தின் சமூக ஒற்று மைக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
பாஜக ஆளும் குஜராத்தில் மாணவர்களிடம் மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா வரலாறு ‘திருத்தி’ எழுதப்படும் என்கிறார். இந்த சூழலில் தான் மாணவர்கள் மாணவிகளுடன் பேசுவது கூட கொலைக்குற்றம் என்று மதரீதியிலான வெறியை இந்துத்துவா கும்பல் கிளப்பி வருகிறது. சாதி மற்றும் மதரீதியான அணி திரட்டலை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.