headlines

img

இருளகற்ற வந்துதித்த இன்னொரு சூரியன்

புரட்சியின் தளநாயகன் மாமேதை லெனின் அவர்களுடைய 150-ஆவது பிறந்தநாள் இன்று. உலகத்தின் வரலாற்றையும், மனிதகுலத்தின் திசை வழியையும் சரியான திசையில் வழி நடத்திய அந்த மாமேதையின் வாழ்வும், பணியும் இன்றைக்கு உலகம் சந்தித்துவரும் நெருக்கடி யான சூழலில் வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்கிறது.

கம்யூனிஸ்ட் கோட்பாடுகளை உருவாக்கிய மாமேதைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரது சிந்தனைகளுக்கு இந்தப் பூவுலகில் செயல் வடிவம் கொடுத்ததன் மூலம் சோசலிசம் என்பது காகிதத்தில் எழுதப்பட்ட கனவுகளின் தொகுப்பு அல்ல. நிஜங்களின் தரிசனமே என்று நிரூபித்த தில் மாமேதை லெனினுக்கு மகத்தான பங்குண்டு.

போல்ஷ்விக்குகளின் புரட்சிகர செம்படைக்கு தலைமையேற்று புரட்சியை சாத்தியமாக்கியதன் மூலம் அன்றைய ரஷ்ய மக்களின் விடுதலைக்கு மட்டுமின்றி காலனியாதிக்க நுகத்தடியிலும், சுரண்டலின் பிடியிலும் சிக்கித்தவித்த கோடானு கோடி ஏழை-எளிய பாட்டாளி மக்களுக்கு நம்பிக்கை தந்தது லெனினுடைய மகத்தான பங்களிப்பேயாகும்.

மார்க்சியம் எனும் விஞ்ஞானத்தை காலத்தின் தேவைக்கேற்ப வளர்த்தெடுத்து அடுத்த  கட்டத்திற்கு கொண்டு சென்றதிலும் அவருடைய தத்துவார்த்த பங்களிப்பிலும் உலகப் பாட்டாளி வர்க்கம் கற்றுக்கொண்ட அனுபவப் பாடம் ஆயிரம் ஆயிரம்.

அன்றைய ரஷ்யாவில் இருந்த வலது-இடது திரிபுகளுக்கு எதிராக தத்துவார்த்தக் களத்தில் ஒரு வலுமிக்க போராட்டத்தை நடத்தியதன் மூலம் புரட்சிகர தத்துவம் தடுமாறாமலும் தடம்  மாறாமலும் பாதுகாத்துத் தந்த பெருமை லெனினுக்கு உண்டு.

1917-ஆம் ஆண்டு ரஷ்ய மண்ணில் மகத்தான புரட்சியை தலைமையேற்று வழிநடத்தியதன் மூலம் அந்த மண்ணில் மட்டுமல்ல, உலகம் முழு வதும் அடிமைத்தளைக்கு எதிராக போராடிய மக்களுக்கு அவர் உத்வேகம் அளித்தார். உலகம் முழுவதும் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு சோவியத் யூனியன் நேசக்கரம் நீட்டும் என்ற லெனினது பிரகடனத்தால் இந்திய விடுதலை இயக்கம் உட்பட பல்வேறு நாடுகளின் விடுதலை இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்தன.

இந்தியத் திருநாடு விடுதலை பெற்றதிலும் அந்த மகத்தான மனிதருக்கும் அவரால் வழி  காட்டப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பெரும் பங்குண்டு. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளை யில் லெனினை நன்றியோடு இந்தியப் பாட்டாளி  வர்க்கம் நினைவுகூர்கிறது.

மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவம் ஒருபோதும் தீர்வாக அமை யாது என்பதுதான் மார்க்சியத்தை முழுமையாக உள்வாங்கி, அதற்கு மண்ணிலேயே உருவம் கொடுத்த மாமேதை லெனின் ஓங்கி உரைத்த செய்தியாகும். முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் அது ஈவு இரக்கமற்ற ஏகாதிபத்தியமாக உருவெடுக்கும் என்று லெனின் மிகச்சரியாக குறிப்பிட்டார். அது உண்மை என்பது நிரூபிக்கப் பட்டுள்ளதோடு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதி பத்திய சக்திகளின் கோர முகத்தை இன்றைய மனிதகுலம் நேருக்கு நேராக சந்தித்து வருகிறது.

மக்களைப் பற்றி கவலையில்லை; முதலாளி களுக்கும், முதலாளித்துவத்திற்கும் கொள்ளை லாபம் ஒன்றே குறி என்பதை இந்த கொடிய கொரோனா காலமும் நிரூபித்துள்ளது.

மறுபுறத்தில் சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட சீனம், கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளும் லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள இடதுசாரி அரசுகளும் கேரளத்தில் நடைபெற்றுவரும் இடது ஜனநாயக முன்னணி அரசும் மனிதகுலம் சந்தித்து வரும் இந்த கொடிய நோய்த்தொற்றுக்கும் கூட  மா மருந்தாக ஆறுதல் தருகின்றன.

பாசிச குணம் கொண்டவர்கள் லெனினுடைய சிலையை தகர்க்கலாம்; ஆனால், அவருடைய சிந்தனையை ஒருபோதும் தகர்த்துவிட முடியாது என்பதையே இன்றைக்கு மார்க்சிய-லெனியத்தின் பக்கம் உலகின் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது காட்டுகிறது.

மாமேதை லெனின் நடத்திய “இஸ்க்ரா” ஏட்டின் பெயர் தாங்கி தீக்கதிர் உதயமாகி ஒளிவீசத் தொடங்கியது. அவரது 150-ஆவது  பிறந்த நாளில் தீக்கதிர் தனது செவ் வணக்கத்தை செலுத்தி அவரது வழியில் தொய்வற்ற பயணத்தைத் தொடர உறுதியேற்கிறது.