வெளிச்சம் போடும் நிலைக்குழு பரிந்துரை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தை மதிப்பிடுவதற்கு சுயேச்சையான ஆய்வு நடத்த வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் அண்மைய பரிந்துரை, மோடி அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பால் சீரழிந்து வரும் ஒரு முக்கிய சமூக நலத் திட்டத்தின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்திற் கான உண்மையான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.86,000 கோடி என்பது, 2019-20-ல் ஒதுக்கப்பட்ட தொகையை விட, பணவீக்கத்தை கணக்கில் கொண்டால், குறைவானதே. பல மாநிலங்களில் நிதி பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே செய்யப்பட்ட வேலைகளுக்கும் ஊதியம் தாமதமாக வழங்கப்படுகிறது.
“ஆதார்” கட்டாய இணைப்பு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு தோல்விகள், மற்றும் PFMS (பொது நிதி மேலாண்மை அமைப்பு) போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளால், தொழிலாளர்கள் பல மாதங்க ளாக ஊதியம் பெறாமல் தவிக்கின்றனர். 0.05% எனும் எள்ளி நகையாடும் இழப்பீட்டு விகிதம் இந்த அநீதியை மேலும் கொடூரமாக்குகிறது.
இத்திட்டத்தை கிராம அளவில் செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவியாளர்கள், கிராம ரோஸ்கார் சேவகர்கள், மற்றும் நிர்வாக ஊழியர்களின் நியமனங்களுக்கு ஒன்றிய அரசு கடும் தடை விதித்துள்ளது. இதனால் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இது வேண்டு மென்றே திட்டத்தை செயலிழக்கச் செய்யும் உத்தியின் ஒரு பகுதியே.
இத்திட்டத்தில் தொழிலாளர்-நாள் விகிதம் அதிகரிப்பதைத் தடுக்க, ஒன்றிய அரசு, நிதியாண் டின் இறுதி மாதங்களில் புதிய வேலைகளை தொடங்க மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பது வழக்கமாகிவிட்டது. 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் பல மாநிலங்களில் புதிய வேலைகள் அனுமதிக்கப்படவில்லை.
பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பெண்களின் பங்கேற்பு “ஒரே மாதிரியாக இல்லை” என்ற நாடாளுமன்றக் குழுவின் கவலை, இத் திட்டத்தில் நிலவும் ஆழமான சமூக அநீதிகளை வெளிப்படுத்துகிறது. ஆனால் மோடி அரசு இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்ய எந்த தீவிர நட வடிக்கையும் எடுக்கவில்லை.
2022-ல் அரசே நியமித்த அமர்ஜீத் சின்ஹா குழு வின் பரிந்துரைகள் இன்னும் தூசி தட்டப்படாமல் உள்ளன. அந்த அறிக்கை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள பல குறைபாடுகளுக்கான தீர்வு களை முன்மொழிந்திருந்தும், ஒன்றிய அரசு அவற்றை செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்க வில்லை. மாறாக, திட்டத்தை மேலும் பலவீனப் படுத்தும் கொள்கைகளையே தொடர்ந்துள்ளது.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான சுயேச் சையான ஆய்வு தேவை என்பதில் எந்த சந்தேக மும் இல்லை. ஆனால் அத்தகைய ஆய்வுகளின் பரிந்துரைகளை செயல்படுத்தும் அரசியல் விருப் பமும், நிதி ஆதாரமும் இல்லாதவரை, அவை வெறும் காகித அறிக்கைகளாகவே இருக்கும்.