headlines

img

உத்தவ் தாக்கரே கதிதான் ஏக்நாத் ஷிண்டேவுக்கும்!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்து ஒருவாரம் ஆகி விட்டது. பாஜக தலைமையிலான  மகாயுதி கூட்ட ணியில் முதல்வர் பதவியை இந்தமுறை விட்டுக்கொடுக்க முடியாது என்று பாஜகவும்,  கூட்டணி ஆட்சி தொடர ஏக்நாத் ஷிண்டே முதல்வராக நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிவசேனாவும் கூறுகின்றன. முதல்வர் பதவி குறித்து மாநில அளவில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால்  தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தில்லிக்கு அழைத்துப் பேசினார். வியாழக் கிழமை நள்ளிரவு வரை நீடித்த கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

முதல்வர் பதவியை பாஜகவுக்கு விட்டுத்தரும் பட்சத்தில், ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியும் அவரது மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவியும் தர பாஜக முன்வந்துள்ளது. ஏற்கெனவே முதல்வராக உள்ளவர் துணை முதல்வராக பணியாற்றினால் அது சரியாக இருக்காது என்று ஷிண்டே தரப்பு சிவசேனா கூறுகிறது. அமித்ஷா  சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் முதல்வர் பதவி முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார். மாநில சட்டப் பேரவையில்  மொத்தமுள்ள 288 இடங்களில் 132 இடங்களில்  வெற்றி பெற்றுள்ள பாஜக பெரும் பான்மை பெற இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

2019 ஆம் ஆண்டு சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத  காங்கிரஸ் அரசை கவிழ்த்ததற்கா கவும்  சிவசேனாவை உடைத்ததற்காகவும் பரிசாக  முதல்வர் பதவியை ஷிண்டேவுக்கு  பாஜக வழங்கியது. இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர்  பதவியில் இருந்த ஷிண்டே தற்போது  பாஜகவின் முடிவுக்கு அடி பணிந்து விட்டார் என்றே தெரிகிறது. இருப்பினும் இந்த  கூட்டணி அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுமூக மாக பயணிக்கப் போவதில்லை.  கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக, அதிகாரப் பகிர்வை எளிதாக விட்டுக்கொடுக்காது. தனிப்பெரும் கட்சி என்ற முறையில்  அனைத்தையும் கட்டுப் படுத்த விரும்பும். இதனால் ஏற்படப்போகும் மோதல்களால் ஏக்நாத் ஷிண்டே தலைமை யிலான  சிவசேனா கட்சியின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே உள்ளது. தனக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என்பதற் காக எந்த ஒரு இழிவான  நடவடிக்கைக்கும் செல்லத் தயங்காத கட்சி பாஜக. 

மகாராஷ்டிராவில் அஜித்பவார்  பாஜக வுடன் செல்ல தயாராகி விட்டதால் ஷிண்டே தனி மைப்படுத்தப்பட்டுள்ளார்.  2019 -ம் ஆண்டு  உத்தவ் தாக்கரேவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை  பாஜக மீறியது. முதல்வர் பதவி ஆசை காட்டி சிவசேனாவை இரண்டாக உடைத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கும் அதே கதி ஏற்படாது என்பதில் நிச்சயமில்லை.