பாஜக தலைமையிலான மத்திய மோடி அரசு 2014- 2019 கால கட்டத்தில் நாடாளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும் பகுதியை நிறைவேற்றவே இல்லை என்பது ஆதாரப்பூர்வமாக வெளி வந்திருக்கிறது. எல்லாம் வாக்குறுதி யோடு முடிந்து விடுகிறது. மோடிக்கு முந்தைய 2வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதியை விட மோடி அரசு 300 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என்கிறது இந்தியா ஸ்பெண்ட் செய்தி நிறுவனத்தின் ஆய்வறிக்கை.
2018 -19 ல் மக்களவையில் அளித்த வாக்குறு திகளிலும் 76 சதவிகிதம் இதுவரை நிறைவேற்ற வில்லை. அதே போல் கடந்த 2019 பொதுத்தேர்தலுக்கு முந்தைய கடைசி மூன்று மக்களவை கூட்டங்க ளில் அரசு 582 வாக்குறுதிகளை வழங்கியது. அவற்றில் 443 வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவே இல்லை. அதாவது 76 சதவிகித வாக்குறுதி கள் வெற்று வாக்குறுதிகளாக மாறியிருக்கிறது. ஆனால் நாடாளுமன்ற விதிகளின் படி, நாடாளுமன்ற கூட்டங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை மூன்று மாதகாலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்; அல்லது அளித்த வாக்குறுதியை கைவிடுவதாக அறிவிக்க நாடாளுமன்ற உத்தரவாதக்குழுவிடம் அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் இதில் எதையும் மோடி அரசு முழு மையாக பின்பற்றவில்லை.
ஆனால் பிரிவு 370, தேசிய குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை நிறைவேற்றி நாட்டை மதரீதியாக பிளவுபடுத்துவதில் மட்டும் கவனமாக இருந்து வருகிறது. அதாவது அரசின் செயல்திட்டத்தை அமலாக்குவதற்கு மாறாக ஆர்எஸ்எஸ் செயல்திட்ட அமலாக்கத்தில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்துகிறது. தற்போதும் கூட இந்திய பொருளாதாரம் சர்வநாசமாகி வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உருக்கு உள்ளிட்ட 8 முக்கிய துறைகளில் 1.5 சத விகிதம் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சிய டைந்திருக்கிறது. அதே போல் நவம்பர் மாத இறுதி நிலவரப்படி வரவிற்கும் செலவிற்குமான இடைவெளி ரூபாய் 8 லட்சத்து 7ஆயிரத்து 834 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இந்த நெருக்கடியிலும் கார்ப்பரேட்களின் வரியை 35 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக குறைத்து, கார்ப்பரேட்களுக்கு காவடி தூக்கியிருக்கிறது. ஆனால் மறுபுறம் சாமானிய மக்களின் கழுத்தை மேலும் நெறிக்கும் வகையில் ரயில் கட்டணம் மற்றும் கேஸ்சிலிண்டரின் விலையையும் கடுமையாக உயர்த்தியிருக்கிறது. மோடி அரசு எடுத்து வரும் பொருளாதார சீர் குலைவு நடவடிக்கைகள் ஒவ்வொன்றும், இந்திய சமூகத்தை நேரடியாக சீர்குலைத்து வருகிறது. இனியும் மோடி வகையறாக்களின் பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என்பதற்கு 2020ம் ஆண்டில் எழுந்து நிற்கும் போராட்டங்கள் சாட்சியாக இருக்கிறது.