செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

மிய்யாவ் - மொசைக்குமார்

கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வீடு பூனைகளின் புகலிடமாகவும் இருக்கிறதென்பது யாவரும் அறிந்ததே… ஹாலிவுட் திரைகளில் தோன்றும் பொசு பொசுவென்ற ரோமங்களும், கொளுத்த உருவமும், பாவணைகளுடன் மனித மொழி பேசிக்கொண்டே பல வண்ணங்களில் வலம் வரும் அயல் நாட்டுப் பூனைகள் போல் ஒரு போதும் அங்கு இருந்ததாக தெரியவில்லை. சந்தனம், கருப்பு, பிஸ்கட் கலர் என ஒன்றிரண்டு தோன்றி மறைந்தாலும் ஏனையவையெல்லாம் புலிக்குட்டிகளை கருப்பு வெள்ளையில் நகல் எடுத்தாற்போல் சாம்பல் நிறத்தில் வரிகளுடனும், பருத்தும், ஒடுங்கியும் அல்லாமல் நடுத்தரமாகவும் அழகாகவும் இருந்தன. இந்தியப் பூனைகளின் அடையாளமோ என்னவோ…!

ஒரு காலத்தில் ‘பூனைக்காரம்மாள் வீடு’ என்றால் தவழும் குழந்தையிலிருந்து தபால்காரர் வரை கை நீட்டிக் காண்பிப்பார்கள். கண்ணம் பிதுங்கிய உருண்டையான முகமும், பருமனான உடல் வாகும், வெண் சிவப்புமான நிறமும், நூல் சீலையும், இடுப்பில் சுருக்கப் பையுமாய் வாசலில் நிற்கும் அந்தம்மாவின் காலைச் சுற்றி எப்போதும் இரண்டு மூன்று பூனைகள் திரியும். “ச்.சீ போங்க கழுதைகளா அங்கிட்டு” என கனப்பொழுது விரட்டினாலும், நினைக்கும் பொழுதுகளெல்லாம் பாலும், சோறும், கடை விற்பனைக்கென்று வாங்கி வைத்திருக்கும் நொருக்குத் தீணிகளையும் வஞ்சனையில்லாமல் அவைகளுக்குப் பரிமாறுவார். “இவளுக்கு கிறுக்கு ஏதும் புடிச்சிக்கிருச்சா… ஆசைக்கி ஒன்னு ரெண்ட வளக்க வேண்டியதுதே, கஞ்சி கிஞ்சிய ஊத்த வேண்டியதுதே… அதுக்கின்னு ஒரேடியா பாலும் தேனும்; கொட்டிக்கிட்டே இருக்கனும்னா எங்க போறது?” ஏதாவதொரு புத்தகத்தில் முகம் புதைத்தபடியே அங்கலாய்ப்பார் அம்மாவின் துணைவர்.

மூத்த மகளின் திருமணத்திற்க்குப் பிறகு வீட்டின் முன் புறத்தை பெட்டிக்கடையாக மாற்றியமைத்த பின்புதான் பூனைகளின் சேவை தேவையெனப்பட்டது. எதிர்த்தாப்பில் நியாய விலைக் கடைகளுக்கான குடவுன் இருந்ததால் கொழுத்த எலிகளின் பொந்துகளும் சுற்றிலும் நிறையவே இருந்தன. எத்தனை நாட்களுக்குத்தான் இடுக்கியும் கூண்டிலும் கை கொடுக்கும்! அதன் நிரந்தர எதிராளி கைவசமிருந்தால் தேவலையல்லவா.. ஆரம்ப காலப் பூனைகள் சற்று போராட்டத்திற்குப் பிறகே இடத்தையும், வீட்டார்களின் இதயத்தையும் தக்க வைத்துக் கொண்டன. ஆனாலும் அவருக்கு அதில் உடன்பாடு இருந்ததில்லை. “வில்லன அடிச்சு துரத்திப்புட்டு, நாளடைவுல கதாநாயகிகிட்ட கதாநாயகனும் அதேச் சோழிய செய்யுற கதையாவுல்ல இருக்கு நீ பூனை வளர்க்குறது… இப்புடி நாளொன்னையும் போடுறதுக்கு அத எலிகளே திண்ணுட்டுப் போய்த் தொலையுதுக.. நம்ம வம்ச வழியில எவெம் பூனைய வளத்தயான்னு நீ அதுகல தூக்கி கொஞ்சிக்கிட்டு திரியுற?” அவ்வப்போது கடிந்து கொள்வார். ஆனாலும் அவைகளுடனேயே அவரும் நீண்ட வருடங்களைக் கடத்திவிட்டார். உஜாலா வெண்மையில் கதர் வேட்டியும் சட்டையுமாய் தோன்றும் அவர் தோப்பு, தோப்பு விட்டால் நவதானிய கமிசன் வியாபாரம், அதையும் தாண்டி அந்தம்மாவிற்குத் துணையாக பெட்டிக் கடை என்று அதிலும் லயித்திருப்பார். அப்போதும் சும்மா கிடையாது!; எந்த நேரமும் பேப்பரும், புஸ்தகமுமாகவே கிடப்பார். போதாக் குறைக்கு மார்க்சின் கோதா வேலைத்திட்டத்தைப் பற்றிய விமர்சன உரையும், சிவகாமியின் சபதமும், டால்ஸ்டாயின் அன்னா கரீனாவும், பாரதியின் கவிதைகளும், இன்னபிற கதைப்புத்தகங்களும், நாவல்களும் அவரின் ட்ரங்குப் பெட்டியினுள்ளே நூலகமாய்க் கிடக்கும். சக மனிதர் எவரொருவர் கிடைத்தாலும் போதும் அரசியலும், நாட்டு நடப்பும், சினிமா விமர்ச்சனமும் என்று பொழுது சாயும் வரை அதிலும் உணர்ச்சிவசமும் சுவாரஸ்யமும் பட்டுக் கொண்டிருப்பார். இத்தனைக்கும் வெள்ளைக்காரன் காலத்தில் வெறும் இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவராம்.

வெண்ணிற ஆடையில் மை விழுந்தாற்போல் அவர் மனசெல்லாம் பூனைகள் குறித்தே எரிச்சலடையும். எனினும் ஒருபோதும் அவைகளை அடித்துத் துரத்தியோ, வீட்டில் மல்லுக்கட்டியதோ இல்லை. பூனைகள் பலுகிப் பெருகும் தருணங்களில் வெளியிலிருந்து பலர் வந்து குட்டிகளை வாங்கிச் செல்வர். “புள்ளைய பத்தெரமா பாத்துக்கங்கய்யா…” பூனைக்காரம்மாள் சொல்லியனுப்பும்.  கடைசியாக இறுதி நாட்களில் ஒன்றிரண்டு பூனைகள் மட்டுமே அங்கிருந்தன. எதிர்பாராத உடல் நலக் குறைவு, நீடிய படுக்கை, மருந்து மாத்திரை எல்லாம் கடந்து நீடிய துயில் என்று அந்தம்மா உலகை கடந்த நாளும் அரங்கேறியது. அழுது வடிந்த சோக வீட்டின் வாயிலில் வேயப்பட்ட ஒற்றைக் கிடுகுப் பந்தல் பிரிக்கப்பட்டு மீண்டும் சூரியன் ஒளிவீசத் துவங்கியது. பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் விடுத்த வேண்டுகோலுக்கிணங்க தற்போது தாத்தாவாய் தோற்றமளிக்கும் அந்த ஐய்யா பெட்டிக்கடை முதல் அணைத்துப் பணிகளுக்கும் விடை சொல்லிவிட்டு ஓய்வும் முழுநேர வாசகருமாகிவிட்டார். பூனைகள் மீதான கவனத்தை மாடியி லிருக்கும் மகன் குடும்பம் தானாக ஏற்றுக் கொண்ட போதிலும் அவைகளை எந்நேரமும் கண்காணிப்பது இயலாமல் போயிற்று. தட்டில் கலந்து வைக்கப்பட்ட பால் சோறெல்லாம் முழு நிலவு போல் தீராமல் புளித்துக் கிடந்தன. கூடு களைந்த குருவியைப் போல் பூனைகள் அங்குமிங்கும் ஓடித் திரிந்தன. புதுப்பழக்கமாய் இரவுகளில் ஜன்னலைத் தாண்டி தெருவில் இறங்குவதும் கும்மிருட்டில் துரத்தும் நாய்களுடன் மல்லுக்கட்டி மரண ஓசை எழுப்புவதுமாய்க் கத்தின. இருந்த மூன்றில் ஒன்று ரத்தம் உறைய வாசலில் குதறப்பட்டுக் கிடந்தது. மற்றொன்று இப்போ பிறகோ என வீட்டின் மூலையிலேயே ஒடுங்கிக் படுத்திருந்தது. போதாக்குறைக்கு முரட்டு அன்னியப் பூனையொன்றும் அவ்வப்போது வீட்டினுள் நுழைந்து அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் வெறுமனே புத்தகமொன்றை கையில் விரித்து ஏந்தியபடி நெடுநேரம் வீதியை நிலை குத்திய கண்ளோடு பார்த்துக் கொண்டிருந்தவர்; அந்நேரம் வந்த மகன் ஆச்சரியம் கொள்ளத்தக்கதாய்… “ஏப்பா அந்தம்மா இல்லைங்குறதுனால கண்ட நாயெல்லாம் பூனைகள கடிச்சு குதறுதப்பா.. எந்தக் காட்டுப் பூனையோ வந்து அதிகாரமும் பண்ணுதப்பா.. ம்;.. நல்லாவாயிருக்கு? அதக் கொஞ்சம் பாக்குனுமப்பா.. வீடு வெறுச்சோடிப் போயிரக் கூடாது அவ யாவகாத்தமா அதுகளுந் தொடந்து இருக்கனும்.. ஜன்னல்ல இருக்க ஓட்ட ஒடசல அடச்சு விடுங்க.. வேளா வேளைக்கி நாங் கஞ்சிய ஊத்திப் பாத்துக்கறேன்.” எனச் சொன்னார். சுவரில் கண்ணாடிச் சட்டத்தினுள்ளே நாற்காலியில் படமாய் உட்கார்ந்திருந்த அந்தம்மா முகத்தில் புண்சிரிப்பு தென்பட்டது. அதன் பிறகு மீந்திருந்தது ஒரேயொரு குட்டிதான். முதுகின் நடுப்பகுதியிலும் கண்களுக்கு மேலேயும் கவசமாய் வட்ட வடிவில் கரும்பட்டைகள் தோன்ற முழுவதும் வெண்மையாகவும் அழகாகவும் இருந்தது. இம்முறை ஐயா அதற்கு புதிய உணவுப் பாத்திரத்தை வழங்கி பாலும் சோறும் தேவைக்கு அதிகமாகவே வைத்தார். ஊடே ஊடே முருக்கு அப்பளம் போன்ற நொருக்கித் தீணிகளையும் போட்டார். அருகாமையில் தூக்கி வைத்துக் கொண்டு வாசிப்பின் இடையே தழுவிக் கொடுக்கவும் செய்தார்.

இது அவருக்கு புதுப் பழக்கமாய் இருந்தது. வாயில்லா ஜீவனுடனான நட்புறவில் ஓர் ஆனந்தமும் மன அமைதியும் தென்பட்டது. குழந்தை போல அதுவும் கீழ்படிகிறது. கட்டிலில் காலை தொங்கப் போட்டு புத்தகமும் கையுமாக அமர்ந்திருக்கும் அவரின் இடது பக்கத்திலே அந்த பூனைக்குட்டியும் அவ்வப்போது வந்தமர்ந்து கொள்ளும். அதன் ‘அப்பளம்’ கொரிக்கும் ஓசையும் ‘மிய்யாவ்’ என்ற சப்தமும் அவரின் உணர்வலைகளைத் தட்டியெழுப்பியது. கடந்த காலங்களில் அவைகளின் மிது நித்தமும் கோபப்பட்டது, எரிந்து விழுந்தது எல்லாம் நினைவுகளில் மலர்ந்து சிரிப்பூட்டியது. பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்திய துணைவியாரின் குணம் இப்போது  பிடித்துப் போனது. கண்ணாடிச் சட்டத்தைப் பார்த்து புண்ணகைப்பார். பழங்கால எகிப்தில் மரித்த பூனைகளை மம்மிக்களாக மாற்றிய வரலாற்றை படித்துக் கொண்டே திரும்பி “பின்னும் பெறகு ஒனக்கும் அது மாதிரி பாடம்பண்ணுவமா…” எனக் கேட்கிறார். அந்தநேரம் பார்த்து கூட்டுறவுக் குடவுன் புதரிலே தென்பட்ட எலியொன்றைப் பிடிக்க அது தாவி ஓடுகிறது. “வா ஒன்னய வச்சுக்கிறேன்..” என்கிறார்  செல்லமாக. அதன் வளர்ச்சி போலவே இருவருடனான நட்பும் பருமன் கண்டது. இப்படி இருக்கையிலேதான் ஒரு நாள் காலைப்பொழுதிலிருந்தே பூனையைக் காணவில்லை. முதலில் எதார்த்தமாக விட்டவர் காலை மதியமாகி, மதியம் மாலையாகிவிடுகையில் மனதுக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் எட்டிப் பார்க்கிறார்! தட்டுப்படவில்லை. முதல் நாள் இரவு தட்டில் வைக்கப்பட்ட உணவு அப்படியே இருக்கிறது. எங்கு போயிருக்கும்? கூடப் போனால் அரைமணி நேரத்திற்கொருமுறை வந்து எட்டிப்பார்க்குமே! இரவு நெடுநேரமாய் தூக்கம்தொலைத்து அதன் வருகைக்காக காத்திருக்கிறார்.

‘கார்த்திகை மாதமானதால் தெருவில் நாய்கள் அவ்வப்போது பட்டாளமாய் அவசர அணிவகுப்பு நடத்தி சலசலக்கின்றனவே… ஒரு வேளை அவைகளிடம் சிக்கி சின்னாபின்னமாகியிருக்குமோ.! ச்.சீ இருக்காது… வேறு பூனை எதனிடமும் காதல் வயப்பட்டுப் பின் சென்றிருக்குமோ.. எவரேனும் பிடித்துச் சென்றிருப்பார்களோ?’ குழப்பத்தினூடே அரைத்தூக்கத்தில் பொழுதை கழிக்கிறார். விடிகிறது. வீட்டாரிடம் கேட்கிறார். “தேடிப்பாப்போம்” “வரும், எங்க போகப் போகுது” சாதாரணமாய்ச் சொல்லிவிட்டுப் போகிறார்கள். ஆனால் வந்தபாடில்லை. இரண்டு மூன்று நாள் ஆகிறது. உள்ளம் பட படக்கிறது. இதழ்களின் வாசிப்பினூடே பூனையே பிம்பமாய் வந்தாடுகிறது. தெருவில் தட்டுப்படுவோரிடமெல்லாம் சொல்லி வைக்கிறார். பலன் கிடைத்தாய் போலில்லை. மீண்டும் வீடு வெறுச்சோடுகிறது. அதன் ‘மிய்யாவ்’ சப்தமின்றி தவிக்கிறது. “இருந்தா இந்நேரம் வந்துருக்கும்ல.. எங்கயாவது அடி கிடி பட்டு செத்துப் போயிருக்கும்”  சக மனிதர்கள் சொன்னது நம்பப்படுவதற்கு ஏதுவாயிருந்தாலும், பொம்மைக்கு ஏங்கும் சிறுவனைப் போல் பூனைக்கு ஏங்கி “இல்ல அப்பிடியெல்லா இருக்காது. வரும்” எனச் சொல்லி அமைதி காக்கிறார். நினைவின் மூலையில் நம்பிக்கைப் பொறி தட்டிக்கொண்டேயிருக்கிறது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது திடூமென பேரிரைச்சல் காதுகளில் அரைந்து கவனத்தை ஈர்க்கிறது. ஏரிட்டுப் பார்க்கிறார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் நீண்டு ஓடும் பிரதான சாலையில் பச்சை வர்ணக் கொடிகளுடன் வயது வித்தியாசமின்றி ஆண்களும் பெண்களுமாய் கோஷங்கள் முழங்க காவலர்கள் துணையுடன் பெருங் கூட்டமாய் கடந்து கொண்டிருந்தனர். அவ்வழியே வந்த பாதசாரி ஒருவரை அழைத்து விபரம் கேட்கிறார்.

“அது வேற ஒன்னுமில்லங்கய்யா.. மேற்கால தோட்டந் தொரவுக இருக்கு பாருங்க.. அதுக்கு ஊட கவர்மென்ட்டு ஏதோ பைப்பாஸ் ரோடு போடப்  போகுதாம்.. கண்ணு கணக்கில்லாத மரஞ்செடி கொடிகள யெல்லாம் வெட்டிச்சாய்க்கப் போறாங்களாம்.. அதா அததுக்கு உரிமையானவங்க ஒன்னு சேந்து கலெக்டர் ஆபீஸ் வாசல்ல போராட ஊர்வலமாப் போறாங்க” “அப்புடியா சங்கதி.. ‘மரம் வளப்போம் மழை பெருவோம்னு’ சொல்ற அரசாங்கமே மரங்கள அழிப்போம் ரோடு போடுவோம்னு சொல்றது நல்லாவாயிருக்கு! எல்லாமே அத்தியாவிசயத் தேவதே, ஆனா அது அது குடிமக்களுக்கோ விவசாய நெலத்துக்கோ பாதிப்பில்லாமல்ல செய்யனும்.. ஊருக்குள்ள நல்லாயிருந்த பஸ்டாண்ட அஞ்சாறு கிலோ மீட்டருக்கு அப்பாள கொண்டு போயி போட்டுர்ற… அவெ அவெ அதுக்கே ஒரு ஊருக்கு போறமாதிரியில்ல போயி பஸ்ஸேறுரான், ஒத்த செத்தையில அர்த்த ராத்திரியில பொண்ணு பிள்ளைக போயி வாரது செரமமா இருக்கு அது ஒன்னு, அகல ரயில் பாதை போடுரேன்னு சொல்லி இருந்த தண்டவாளத்தயெல்லாம் உருவிப்போட்டு ஏழெட்டு வருசம் ஆகப் போகுது… இன்னோ வந்த பாடில்ல.. இதுல புதுசா பைப்பாஸ்ன்னு கொண்டு வந்து இருக்கற மரஞ் செடி கொடியெல்லாம் அழிச்சுப் போட்டா என்ன பண்ணுறது? ஒவ்வொருத்தரும் உசிரக் குடுத்து மா, பலா, தென்னைன்னு வருசக்கணக்கா வளத்து வச்சிருக்காகளே… அதயெல்லாம் வேறோட புடுங்கனும்னா எப்புடிப்பா விடுவாக..”  “ஆமங்கய்யா.. எல்லாரும் அதத்தாஞ் சொல்றாங்க”

“அமேசான் காடுதே ஒலகத்துல பெருசுன்டு அம்புட்டுப் பேருக்குந் தெரியும்.. ஆயிரத்து தொளாயிரத்து எம்பதுகள்ல ரப்பர் தோட்டத்தக்காக அந்த காடுகளயும் அழிச்சதும், அதுக்காக அந்த பிரேசில் நாட்டுக்குள்ளயே நடந்த போராட்டமும் எம்புட்டு பேருக்கு தெரியும்?” “என்னங்கய்யா சொல்றீங்க” “ஆமா.. அப்புடி இருக்கையிலதே, ‘சிகோ மெண்டிஸ்’-னு ஒருத்தரு அப்ப அங்க அடிமைத் தொழிலா இருந்த ரப்பர் எடுக்கறத ஒழிக்கனும்னும், காட்ட அழிச்சு ரப்பர் தோட்டம் போடுறவகளுக்கு ஒத்துழைப்பு குடுக்கக்கூடாதுண்டும் அதே ரப்பர் எடுக்குற தொழிலாளர்கள பூராம் ஒன்னு திரட்டி சங்கம் மூலமா போராட்டத்த முன்னுக்கு வச்சாரு… அது நிமித்தமா சொந்த ஊர்லயே லீவுக்கு போன போது அவரு சுட்டுக் கொள்ளப்பட்டதெல்லாம் வேற கதை… ஆனாலும் காடுகளுக்காக மரங்களுக்காக உலகம் முழுக்க அப்பப்ப மனுச மக்க எழும்பி வைராக்கியமா நிக்கத்தாஞ் செய்யிறாக. அந்த வகையில இப்ப இங்க நடக்கிற போராட்டமும் சரித்தானப்பா, நம்ம பொருளு நம்மலுக்குத்தாங்குறதுல உறுதியா நிக்கனும், யாரு என்ன சொன்னாலும் நம்பிக்கைய மாத்திரங் கைவிடக்கூடாது. புறவழிச் சாலையோ, வேற என்னமோ அதை இன்னுங் கட்ட கடைசியில பொட்டல் நிலங்களா இருக்கற எடத்த பாத்து போட வேண்டியதுதான..” உணர்ர்ச்சிவசப்பட்டவராய்ச் சொல்லுகிறார். தொடர்ந்து இரண்டு நாட்களும் கோஷங்கள் பேரணியாய் கலெக்டர் அலுவலகம் நோக்கிப் பயணிக்க, இவருக்கு பூனையுடன் மேற்கே மலையடிவாரத்து மரங்களும் சேர்ந்து மனதை பிசைந்து கொண்டிருந்தன.

அதற்கடுத்தநாள் சாலையில் வாகனங்கள் விரைந்தோடும் இரைச்சலைத்தவிர வேறொன்றும் கேட்கவில்லை.. வழக்கத்திற்கு மாறான அமைதி. கோஷமுமில்லை பேரணியும் இல்லை! என்னவாகியிருக்கும்? விளை நிலத்திற்காக மரம் செடி கொடிகளுக்காக குரல் கொடுத்தவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா! விரித்த புத்தகமொன்றில்  அச்சிந்தையிலேயே ஆழ்ந்திருந்த போது…   திடுமென உடல் சிலிர்க்க, நெஞ்சுக்கூடு படபடக்க, உரோமங்கள் கூச்செரிய படக்கென பக்கவாட்டில் இவர் திரும்பிப் பார்க்கும்படி  மெல்லிய சப்தமொன்று கேட்கிறது “மிய்யாவ்” தப்பித்த மேற்கின் மலையடிவாரத்து மரங்களின் ஒட்டுமொத்த குரலாகவும் அது அவருக்குப்பட்டது.

 

;