headlines

img

கைப்பிடித்த பேனாவோடு கால் நடந்த பாதையில்…

இயல்பிலேயே பன்முகத் தன்மை வாய்ந்தது பத்திரிகையாளர் பணி.ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்கள்,புதுப்புது அனுபவங்கள், புதுப்புதுப்பிரச்சினைகள். ஒரு காதலோடு பேனாவின் கரம் பிடித்த பத்திரிகையாளர்கள் எத்தனை ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டாலும் அந்த ஈர்ப்பு மாறாமல்இருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று இந்தப் புதுமைதான் என்றால் மிகையல்ல. பத்திரிகையாளரின் அனுபவ வயது கூடக்கூட, அவரது எழுத்து இளமையோடு திகழ்கிற அதிசயத்தைக் காணலாம்.

அத்தகைய இளமையோடு இயங்கிக்கொண்டிருக்கிற ஒரு மூத்த பத்திரிகையாளர் டி.வி.எஸ்.சோமு. தந்தை அழகிரி விசுவநாதன் வீட்டில் அரிய சொத்தாக அமைத்திருந்த சிறுநூலகம், வரவழைத்த பல்வேறு பருவ இதழ்கள் ஆகியவற்றின் அருளாசியால் பள்ளிப் பருவத்திலேயே இவருக்கு வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுபாடு பிறந்தது. “நாக்கின் சுவை அறியும் முன்பே படிப்பின் சுவை அறிந்தேன்” என்று தன்னுரையில் கூறுகிறார். பின்னர் எழுதுகிற சுவையை ஊட்டிக்கொள்கிறார். “ஆட்சியரைச் சந்தித்துப்பிரச்சினைகளை எடுத்துக்கூறினார் கள்,” என்பதான செய்திகளைப் படித்துவிட்டு, நமக்குத்தான் பிரச்சினைகளே இல்லையே, நாம் ஏன் மற்றவர்களுடைய பிரச்சினைகளை எழுதுகிறஆளாக மாறக்கூடாது என்ற எண்ணம்ஏற்படுகிறது. அந்த எண்ணம் கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கி, சமூகத்தின் தலையெழுத்தை விசாரிக்கிற இதழியலாளராக ஈடேறுகிறது.

எந்தப் பத்திரிகையானாலும் ஏதோவொரு நிறுவனத்தின் தொழில் அல்லது ஏதோவொரு இயக்கத்தின் களம் அல்லது ஏதோவொரு குழுவின்வெளிப்பாடு என்றுதான் வருகிறது. அந்த நிறுவனம், இயக்கம் அல்லதுகுழுவின் நோக்கங்கள், கொள்கைகள், அணுகுமுறைகள் சார்ந்தே ஒருபத்திரிகையாளர் பணியாற்ற வேண்டும்.அத்தகைய பணிமுறையிலேயே சொந்த அடையாளங்களைப் பதிக்க முடிவது ஒரு சாதனைதான். அவ்வாறுசாதிக்கிற பயணத்தில் பல்வேறு நிகழ்வுகள் குறித்த செய்திகளும், அந்தச் செய்திகள் குறித்த சிந்தனைகளும் வந்துசேர்கின்றன. நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே சித்தரிக்கிற செய்திகள், அவற்றைப் பற்றிய கருத்துகளைவெளிப்படுத்துகிற பேட்டிகள், பத்திரிகையாளர் தனது மதிப்பீட்டைச் சொல்கிற கட்டுரைகள் என வாசகர்களுக்கு அனுபவமாகின்றன. அதேவேளையில் அந்தச் செய்திகளுக்காகவும் பேட்டிகளுக்காகவும் கட்டுரைகளுக்காகவும் ஒரு பத்திரிகையாளர் மாறுபட்ட பல அனுபவங்களைச் சந்திக்கிறார்.

மிக அரிதாகவே அந்த அனுபவங்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்பதால், சக பத்திரிகையாளர்களுக்குக் கூட தெரியவராமல் கடந்துவிடுகின்றன. அப்படிக் கடந்துபோக விடாமல் பகிர்வது வாசகர்களுக்கு சுவையான தகவல்களைத் தருவதோடு, ஊடக உலகின் இளம்தலைமுறையினருக்கு ஒரு செயல் முறைக் கையேடாகவும் பயன்படும். அத்தகைய ஒரு பகிர்வாகவே டி.வி.எஸ்.சோமு தனது நினைவுக் குறிப்பிலிருந்து ‘பேனாவின் கைப்பிடித்து…’ என்ற இந்த நூலைத் தொகுத்தளித் திருக்கிறார். 

ஒரு பழமையான கோவிலை அர்ச்சகர் இழுத்து மூடியது பற்றிய தகவல் வந்ததைத் தொடர்ந்து அதற்கான காரணத்தை அறியப் புறப்படும்செய்தியாளருக்கும், புகைப்படக்காரருக்கும் ஏற்பட்ட முதல் பிரச்சினை அந்தக் கோவில் உள்ள ஊர் எங்கேஇருக்கிறது என்று கண்டுபிடிப்பதுதான்! இன்றைய ‘கூகுள் மேப்’ வசதிகள் இல்லாத அந்த நாளில் ஒரு வழியாகஊரைக் கண்டுபிடித்து, வீட்டைக் கண்டுபிடிக்கிறவர்களை விடாமல் விரட்டிக்கொண்டிருந்தது பசி! கிராமப்பண்பாட்டின்படி குடிநீர் தருகிற அர்ச்சகரின் மகள், அவர்களது முகவாட்டத்தைக் கவனித்துச் சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் அழைத்து உணவு பரிமாறுகிறார். நாசூக்குக்காகக் கூட “சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தோம்” என்றெல்லாம் சொல்லாமல் சாப்பிடுகிறார்கள் – அவ்வளவு பசி! பின்னர் வருகிற அர்ச்சகர், அரசாங்க ஊதியம் பல மாதங்களாக வந்து சேராததல் கோவிலை மூட நேர்ந்ததையும், வறுமையுடனான போராட்டத்தையும் சொல்கிறார். பேட்டி அடுத்த வார இதழிலேயே வெளியானது. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ புதிய பிரச்சினைகளை எழுதியாயிற்று என்றாலும், அந்தக் கடுமையான வறுமைச் சூழலில் உணவு தயாரித்தளித்துத் தாயாய் மாறிய அந்தச் சிறு பெண்ணை மட்டும் மறக்கவே முடியவில்லை என்கிறார் பத்திரிகையாளர். 

இது வறுமையால் ஒரு கோவில் மூடப்பட்ட கதை என்றால், திறந்திருந்த ஒரு கோட்டை வறுமையால் இருளில் கிடந்த கதையைச் சொல்கிறது இன்னொரு கட்டுரை. ஒரு “ஆண்ட”பரம்பரையைச் சேர்ந்த “அரசர்”,அவரது குடும்பத்தினர் “தன்மானம்”தடுத்ததால் பிறரிடம் வேலைக்குச்செல்லாமல் அரண்மனைக்குஉள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிகிறது. அது வெறும்தன்மானப் பிரச்சினை அல்ல, நிலப்பிரபுத்துவம் பரம்பரை பரம்பரையாகப் புகட்டி வந்துள்ள வறட்டுக் கவுரவப் பிரச்சினை என்று புரிந்துகொள்ளவும் முடிகிறது.பேட்டிகளின்போது இணக்கமற்ற கேள்விகளை எதிர்கொண்ட சில தலைவர்கள், தங்களது பதில்கள் தவறாக வெளியிடப்பட்டதாகக் கோபப்பட்ட சில கலைஞர்கள் அடுத்தசந்திப்புகளின்போது எப்படி நடந்துகொண்டார்கள் என்பது பின்பற்றத்தக்கதொரு நற்பண்பு. ஊடகவியலாளரின் மனதில் எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வு கூடஇருந்திருக்கலாம்தான். அது தேவையான எச்சரிக்கையே.

அப்படிப்பட்ட எச்சரிக்கையெல்லாம் தேவையில்லை என்பது போல மதவாத முன்னணியொன்றின் தலைவர் பேட்டியளித்திருக்கிறார். “கற்பு” என்ற கற்பிதம் பற்றி நீதிமன்றம் கூறிய கருத்தைக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கொந்தளிக் கிறார் அவர். உடனே இவர், “உங்கள்மதத்தைச் சேர்ந்த நிறைய பெண்கள், குறிப்பாகச் சிறுமிகள் பாலியல் தொழிலில் தள்ளிவிடப்படும் நிலையைக் கலாச்சாரத்தால் தடுக்க முடியாதது ஏன்,” என்று கேட்கிறார். அதற்கு அவர்உரத்த குரலில் அளித்த பதில்: “அப்படியானால் உங்களை ‘……மகன்’என்று கூப்பிடலாமா!”. அந்தப் பேட்டி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்றாலும் கேட்கப்பட்ட கேள்விக்கு இன்றுவரையில் கலாச்சாரக் காவலர் களிடமிருந்து பதில் வரவில்லையே!

ஒரு கிராமத்தில் நிலவிய தீண்டாமைக் கலாச்சாரத்தை ஒழித்தவர்கள் இடதுசாரிப் போராளிகள் என்றுஒரு சுருக்கமான பதிவு நறுக்கெனக் கூறுகிறது. எந்த அமைப்பு என்றுகுறிப்பிடாததில் இடதுசாரி இயக்கங் களைப் பொதுவாக அடையாளப்படுத்த விரும்புகிற நாட்டம் வெளிப்படுகிறது.ஒரு ஜாதகத்தை ஆராய்கிற சில“பிரபல” சோதிடர்கள், அதற்கு உரியவர் இன்னின்ன உயர் பதவிகளுக்கு வருவார், இத்தனை ஆண்டுக்காலம் செல்வச் செழிப்புடன் இருப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களது கணிப்புகளை வெளியிட்டுவிட்டு, இறுதியில் அந்த ஜாதகம் அண்மையில் இறந்துபோன ஒருவருடையது என்ற உண்மை தெரிவிக்கப்படுகிறது. “நாங்கள் கணித்தபடி நடந்தது” என்று விளம்பரப்படுத்திக்கொள்ளத் தவறாத அந்தப் பிரபலங்கள், இப்படியான தப்புக் கணிப்புகள் பற்றி எதுவும் சொல்வதில்லையே ஏன் என்று அந்தச் சோதிடர்களிடம் ஒரே ஜாதகத்தைக் காட்டிக் கணிப்புகளைத் தொகுத்து வெளியிட்ட சோமு கேட்டிருக்கிறார். சோதிடத்தை நம்புகிறவர்கள் சிந்திக்க வேண்டிய கேள்வி.

ஊடகவியலாளர்கள் எப்படியெல்லாம் கூர்ந்த கவனத்தோடு செயல்பட வேண்டியிருக்கிறது என்று தனது தவறுகள் பற்றிய கட்டுரையில் கூறுகிறார். எடுத்துக்காட்டாகப் பதற்றம் கூடாது என்கிறார். “பதறாத காரியம் சிதறாது” என்று தமிழில் சொலவடையே உண்டு. எல்லாத் துறைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும் ஊடகத் துறையினருக்குக் கூடுதலாகப் பொருந்தும்.பேனாவின் கைப்பிடித்து நடந்ததில் ஒரு சிறு தொலைவுதான் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த புத்தகங்களில் எஞ்சியுள்ள நெடுந்தொலைவும் பதிவாக வேண்டும்,அது ஊடகச் செயல்பாட்டுடன் சமூகம் குறித்தும் விரிவான புரிதலை ஏற்படுத்துவதில் ஒரு பங்களிப்பாய் அமையும்.

பேனாவின் கைப்பிடித்து…
ஆசிரியர்: டி.வி.எஸ்.சோமு
வெளியீடு இனியா பதிப்பகம்
சி 4, ஸீபுலான் அபார்ட்மென்ட்ஸ்
156, பாலாஜி தெரு, சீனிவாச நகர்
மடிப்பாக்கம், சென்னை – 600091
பப்:128   விலை:ரூ.160/-
தொலைபேசி: 7358349617

===அ.குமரேசன்===

;