காவல்துறையில் ‘இன்பார்மர்’ எனப்படும் ஆளிநர்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுவார்க ளோ அதைப் போன்றே ஒன்றிய பாஜக அரசு மாநில ஆளுநர்களைப் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அரசாங்கத்தின் சூப்பர் தலைவர் போலச் செயல்பட்டு மாநில அரசுக ளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். தமிழ் நாட்டின் ஆளுநர் ரவி நாளொரு பிரச்சனை யும் பொழுதொரு வம்புமாக போட்டி அரசாங் கம் நடத்த முயற்சிக்கிறார்.
இந்நிலையில் திங்களன்று தமிழக அரசின் பொதுப் பாடத்திட்டம் அவசியமில்லை என்றும் அதுமட்டுமின்றி மாநில அரசு வலிந்து நிர்ப்பந் தித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் ஆளுநர். தேசிய கல்விக் கொள்கை ஒன்றிய அரசால் மாநிலங்களில் திணிக்கப்படவில்லையா? மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்தே பொது முடிவு எடுக்க வேண்டும் என்பதை மதிக்காமல் தானே ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது.
மாநில அரசின் பொதுப் பாடத்திட்டம் கொண்டு வரப்படும்போது கல்விச் சுதந்திரம் பாதிக்கப்படும் என்கிறார் ஆளுநர். ஆனால் ஒன்றிய அரசு கொண்டு வந்தால்- ஒற்றைத் தன் மையைப் புகுத்த நினைத்தால்- மாநிலங்களின் பன்மைத்தன்மையும் சுதந்திரமும் பாதிக்கப்ப டாதா? திணிக்கப்படும் எதுவும் எதிர்க்கப்பட வேண்டியதே. உயர் கல்வி என்பது மாநில அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டு ஒன்றிய அர சின் பொதுப் பட்டியலில் உள்ளது என்கிறார். பொதுப்பட்டியல் என்பது மாநிலங்கள், ஒன்றியம் இரண்டுக்கும் பொதுவானதில்லையா? அதை ஒன்றிய அரசே ஆக்கிரமித்துக் கொள்வது எதேச்சதிகாரம் இல்லையா?
பல்கலைக்கழக மானியக்குழுதான் பாடத் திட்டத்துக்கு அதிகாரம் படைத்ததாகக் கூறும் ஆளுநருக்கு பாடத்திட்ட வரையறை (Curricu lum)-என்பதற்கும் பாடத்திட்டம் (syllabus) என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? மானியக் குழு தான் அனைத்தையும் கவனிக்க வேண்டும் என்பது அத்துமீறல் இல்லையா? அதற்கு சட்டம் இயற்றினால் அது நியாயமாகி விடுமா?
ஆளுநர் வேந்தர் என்ற முறையில் தமிழ் நாட்டின் பல்கலைக்கழகங்களில் கடந்த மூன்றாண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்துவ தற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பது அந்தப் பதவிக்கு நியாயம் வழங்குவதாகுமா? திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள் ளார்களே. இதுபோல் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மாண வர்களுக்கு வேந்தரின் பதில் என்ன? தன்னாட்சி கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர் பற்றிக் கவலைப்படும் ஆளுநர் ஏழை, எளிய லட்சக்க ணக்கான மாணவர்கள் பற்றிக் கவலைப்படாத தேன்? வேந்தர்க்கழகு மாணவர்களின் நலன் காப்பதுதான். முதலில் அதன் மீது கவனம் செலுத்துங்கள்.