headlines

img

ஒன்பது ஆண்டுகளாக ‘தேர்வு’ செய்யாததேன்?

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான செவ்வாயன்று நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்க ளுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யும் மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்திருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் அப்போது பேசிய பிரதமர் மோடி பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வரு வதற்கு கடவுள் என்னை தேர்வு செய்தார் என்று கூறியிருக்கிறார்.

அப்படியென்றால் இந்த ஒன்பதாண்டு காலமாக ஏன் இவர் தேர்வு செய்யப்படவில்லை. ஜனநாயக நாட்டில் மக்கள்தான் ஒரு ஆட்சியை ஏற்படுத்தவும் தடுக்கவும் உரியவர்க ளாக வரம் கொடுப்பவர்களாக இருக்கிறார் கள். அவர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதி யையும் மோடி அரசு இந்த இரு தவணை ஆட்சிக் காலத்திலும் நிறைவேற்ற முயற்சிக்க வில்லை. அதனால் மக்கள் கொந்தளிப்பாகவே இருக்கிறார்கள்.

ஆனால் ஆர்எஸ்எஸ்- கார்ப்பரேட்டுகளின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி மக்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்த மோடி அரசு. அண்மையில் கேஸ் விலையில் ரூ.200 -ஐக் குறைத்தது. ஆயினும் அதுகூட பயனளிக்காது என்பதாலும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியதாலும் ஏற்பட்ட பயத்தில் பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது மோடி அரசு.

மல்யுத்த வீராங்கனைகள் பிரச்சனை, மணிப்பூர் பெண்கள் பிரச்சனை என்று பெண்க ளுக்கு எதிராகவே நடந்து கொண்டதால் அதனைச் சமாளிக்கும் வகையில் தான் தற்போது இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா வை கொண்டு வந்திருக்கிறது. கடந்த இரண்டு தேர்தலின் போதும் இந்த மசோதா பற்றி தனது அறிக்கையில் பாஜக கூறியிருந்தது. ஆயி னும் இப்போது தான் நினைவு வந்திருக்கிறது.

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கேட்டு விடுதலைக்கு முன்பு 1931இல் ஷா நவாஸ் பேகம், சரோஜினி நாயுடு போன்றவர்கள் பிரிட்டிஷ் பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசியல் நிர்ணய சபையில் இது பற்றிய விவாதம் வந்தபோது இந்து மத பழமை வாதிகளால் தடுக்கப்பட்டது. தற்போது தேர்தல் வெற்றிக்குப் பயன்படும் என்று நினைத்து பாஜக அரசால் இந்த மசோதா கொண்டு வரப்பட்டி ருந்தாலும் இது நிறைவேறுவது சரிபாதியாக உள்ள பெண்கள் சமூகத்தின் முன்னேற்றத்து க்குப் பயன்படும். இந்த மசோதா நிறைவேற வேண்டியது காலத்தின் கட்டாயம்.