headlines

பாஜக வழியில் ஓ.பன்னீர்செல்வம்...

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது கட்சி சேர்ந்துள்ள இடத்திற்கேற்ப அவரும் பேசிக் கொண்டிருக்கிறார். சேரிடம் அறிந்து சேர் என்பது தமிழ் முதுமொழி. ஆனால் சேராத இடந்தனில் சேர்ந்ததனால் அவர்களது பழக்கங்கள் இவருக்கும் ஒட்டிக் கொண்டுவிட்டது. கோவையில் செவ்வாயன்று பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக சாதி, மத மோதல் இல்லாமல் வலிமையான அரசாக உள்ளது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபின் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம் சிறுபான்மையினர் தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு காரணங்களைக்கூறி பாஜக பரிவாரங்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதுபற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி வாயை திறப்பதேயில்லை. 


அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற அக்கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி முகமது அக்லாக் என்பவரை வீடு புகுந்து அடித்தே கொன்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்கள் என்பது அக்கட்சி சாதி, மத மோதல் பற்றி இத்தகைய கருத்தோட்டத்தை, கண்ணோட்டத்தை, நடைமுறையையும் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.பசுக்களின் பெயரால் நடத்திடும் கோரத்தாண்டவம் மட்டுமன்றி, மதத்தின் பெயரால்முஸ்லிம் சிறுபான்மையினர் மீது முசாபராபாத்தில் நடந்த கொலைவெறியாட்டம் போன்றவையெல்லாம் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களின் பார்வையில் பட்டிருக்க வாய்ப்பேயில்லை போலத் தெரிகிறது. ஏனெனில் அவர் முதல்வராக இருந்தபோது, பக்கத்து அறையில் தலைமைச் செயலாளர் ராம் மோகனராவ் அலுவலகத்தில் நடந்த ரெய்டு பற்றிக்கூட ‘அறியாதவராக’ இருந்தார் என்பது ஊரறிந்த விசயம். ஆனால் அவர்களின் கவனமெல்லாம் பதவியை தக்கவைத்துக் கொள்வதும் அதைக் கொண்டு கல்லாக் கட்டுவதும்தான்.


காஷ்மீரில் ஆஷிபா எனும் சிறுமி கோவிலிலேயே ஆர்எஸ்எஸ் மத வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் அத்தகைய குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தியதும்தான் பாஜகவின் மத துவேச நடவடிக்கைகளுக்கு உதாரணமாகும்.இவைத்தவிர நாடு முழுவதும் பல்வேறு கொடும் நிகழ்வுகளை ஏராளமாக எடுத்துக் கூற முடியும். ஆனாலும் கூட பாஜகவினர் ரெய்டு மிரட்டல் நடவடிக்கைகளால் அவர்களுக்கு எடுபிடிகளாகிவிட்ட எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் வகையறாக்களுக்கு பாஜக ஆட்சியில் நாடு அமைதியாகத்தான் இருக்கிறது என்று சாதிப்பதை தவிர வேறு வழியில்லை. இதற்கெல்லாம் ஏப்ரல் 18ல் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.



;