headlines

img

அரசுத் தலைவரா? எதிர்க்கட்சித் தலைவரா?

அரசுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை ஒடுக்க கேரள அரசு முயற்சிக்கிறது. இப்படி கூறி யிருப்பது அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவரோ வேறு அரசியல் கட்சியின் தலைவரோ அல்ல. மாநில ஆளுநர் தான். 

அரசின் திட்டங்களையும், கொள்கைக ளையும் மாநில அரசு தயாரித்து கொடுத்தாலும், அரசின் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத் தில் முன்வைப்பதால் அதை ஆளுநர் உரை  என்றே அழைக்கிறோம். இத்தகைய அரசியல் சட்ட பதவியில் இருக்கும் ஒரு நபர் தனது பொறுப் பையும், வரம்பையும் மீறி எதிர்க்கட்சிக்காரரைப் போல பேசுவது அந்தப் பதவிக்கு அழகல்ல. 

நாடு விடுதலை அடைந்த துவக்கக் காலங்க ளில் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்கள் அறிவு ஜீவிகளாகவோ, சட்ட மேதைகளாகவோ, ஜன நாயகவாதிகளாகவோ இருந்தார்கள். அவர்கள் அரசமைப்புச் சட்டப்படி செயல்படுவதற்கு முன்னுரிமை கொடுத்தார்கள். ஆனால் பிந்தைய காலத்தில் ஒன்றிய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப் போல தங்களது முகவர்களாக செயல்படுவதற்காக தங்களின் கட்சிக்காரர்களையே நியமிக்கும் போக்கு  மேலோங்கியது. அதன் விளைவு தான் தற்போ தைய நிகழ்வுகள்.

தமிழ்நாட்டில் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவதும், ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் மிக மிக காலம் தாழ்த்துவதும், தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி செய்து கொண்டிருக்கிறார். அதைப் போலவே கேரள மாநிலத்தில் ஆளுநராக உள்ள ஆரிப் முகம்மதுகானும் மாநில அரசால் நிறை வேற்றப்பட்ட பல்கலைக்கழகங்களின் வேந்த ராக முதல்வரே செயல்பட வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப் போவ தில்லை என்று பொதுவெளியில் எதிர்க்கட்சித் தலைவரைப்போல கூறுகிறார். 

ஆனால் ஒரு ஆளுநருக்கு மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ, அவற்றை கிடப்பில் போடவோ குடியரசுத் தலை வருக்கு அனுப்பவோ அதிகாரம் வழங்கப்பட்டுள் ளது. ஆனால் மசோதாவை நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அதேபோல் காலவரையின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடியாது என்றும் மாநில சட்ட அமைச்சர் கூறியுள்ளார். 

மசோதாவில் குறை இருந்தால் அதை சரி செய்யுமாறு மாநில அரசுக்கு திருப்பி அனுப்ப லாம். ஆனால் அந்த பரிந்துரையை ஏற்பதும், ஏற்காததும் சட்டப் பேரவையின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மீண்டும் அந்த மசோதா சட்டப் பேர வையால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுவே அரசமைப்புச் சட்டப்படி ஆளுநர் நடந்து கொள்ள வேண்டியதாகும். எனவே ஆளுநர் தனது அரசமைப்புச் சட்ட பத விக்குரிய கண்ணியத்துடனும், கடமையுணர்வுட னும் நடந்து கொள்ள வேண்டுமென்பதையே ஜன நாயக எண்ணம் கொண்டோர் எதிர்பார்க் கின்றனர்.

;