headlines

img

மனதின் குரலும் மற்றொரு குரலும்

வெற்றி பெற்றால் அதை தனதாக்கிக் கொள்வதிலும், தோல்வியடைந்தால் அதை அடுத்தவர் தோளுக்கு மாற்றி விடுவதிலும் பிரதமர் நரேந்திர மோடி கெட்டிக்காரர். 

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார். ஆனால் சுழற்சி முறையில் தலைமைப் பதவி கிடைத்த ஜி-20 மாநாட்டை புகழ்ந்து பேசுவார். ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, பண வீக்கம் அதிகரிப்பது குறித்து வாய் திறக்க மாட்டார். ஆனால் சந்திரயான்-3 வெற்றிக்கு தாம் தான் காரணம் என மார்தட்டிக் கொள்வார். 

வானொலியில் அவர் பேசி வரும் மனதின் குரல் 105ஆவது உரையில் சந்திரயான் மற்றும் ஜி-20 மாநாட்டின் வெற்றி குறித்து அனைத்து பிரி வினரிடமிருந்து தமக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டேயிருப்பதாக தன்னைத்தானே பாராட்டிக் கொண்டுள்ளார்.

ஜி-20 மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ள தாகவும் அவர் கூறியுள்ளார். மாநாடு நடத்தப் பட்ட ‘பாரத அரங்கிற்கு’ 2,700 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அந்த அரங்கம் ஒரு நாள் மழையைக் கூட தாங்க முடியாமல் வெள்ளம் சூழ்ந்த காட்சி நாட்டிற்கு பெருமை சேர்க்குமா என்பதை பிரதமர்தான் விளக்க வேண்டும். மேலும் மாநாடு நடந்தபோது, தலைநகர் தில்லி யில் ஏழை மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகளை பச்சை நிறப் பதாகைகள் கொண்டு மறைத்தது என்ன தொழில்நுட்பம் என ‘மனதின் குரல்’ பேசாதா?

மாநாட்டிற்கு வந்த தலைவர்கள் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி யதை மறக்க முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை காந்தியடிகள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரின் பிறந்த நாளன்று திறந்தது காந்திக்கு பெருமை சேர்க்குமா? காந்தியடிகளின் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் போன்ற கொள்கைகள்தான் இந்தியாவின் பெருமையே அன்றி ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் வெறுப்பு அரசியல் அல்ல என்பதை இப்போதாவது ஏற்பீர்களா?

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை யொட்டி தூய்மை நிகழ்வுக்கு திட்டமிடப் பட்டுள்ளதாகவும் தனது உரையில் பிரதமர் கூறி யுள்ளார். காந்தியடிகள் இந்துத்துவா சிந்தனை கொண்ட மதவெறியர்களால் கொல்லப்பட்ட தற்கு காரணம் அவர் மக்கள் ஒற்றுமையின் பக்கம் உறுதியாக நின்றதுதான். ஆனால் காந்தியடிகளை தூய்மைத் தூதுவர் மட்டுமே என குறுக்க முயல்வதும் அவரது பெரும் பணியை மறைக்கும் முயற்சியே ஆகும். மனதின் குரல் உரையைக் கேட்கும் போது ஜி20 தலைவர்களுடன் சேர்ந்து   பிரதமர் செய்தியா ளர்களை சந்திக்க மறுத்ததும் நினைவிற்கு வருகிறது.