திங்கள், ஜனவரி 25, 2021

headlines

img

கோவிட் தடுப்பூசி :  அரசியல் லாபம் தேடாதீர்....

கோவிட் 19 தடுப்பூசிகளை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிப்பது என்று முடிவுசெய்து மத்திய அரசு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை நாடு முழுவதும்முதல் கட்டமாக ஒரு கோடி மருத்துவப் பணியாளர்கள், 2 கோடி முன்களப் பணியாளர்கள் என3 கோடிப் பேருக்கு இலவசமாக போடுவது என முடிவுசெய்து, தடுப்பூசி செலுத்தும் பணியை சரியாக செய்து முடிப்பதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் நாடு முழுவதும் 285 இடங்களில் சனிக்கிழமை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராஜென்கா நிறுவனமும் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனத்திற்காக தயாரித்த இந்திய வகை தடுப்பூசியான கோவிஷீல்டு(AZD1222) மற்றும் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத்பயோடெக் நிறுவனத்துடன் இந்திய மருத்துவஆராய்ச்சிக்கவுன்சில் இணைந்து தயாரித்துள்ளகோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்குத்தான் இப்போது அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 உள்பட மூன்றுதடுப்பூசிகளும் இந்திய அரசின் அனுமதியை அடுத்த சில வாரங்களில் பெறக்கூடும் என்று தெரிகிறது.

அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவிட் அச்சத்தில் உள்ள மக்களுக்கு மேற்கண்ட இந்தஅறிவிப்புகளும் நடவடிக்கைகளும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அதேவேளை, தடுப்பூசி சார்ந்த சில கேள்விகளும் சமூக ஆர்வலர்களாலும் மருத்துவ விஞ்ஞானிகளா லும் எழுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுமதிஅளித்துள்ள இரண்டு தடுப்பூசிகள் தொடர்பாக -அவை சோதனை செய்யப்பட்டபோது எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்பட்டன, எப்படிப்பட்ட முடிவுகள் கிடைத்தன - என்பன உள்ளிட்ட விபரங்களை மத்திய அரசு பகிரங்கமாக மக்கள் முன்பு வெளியிடுவதுதான் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். உலகின் பிற பகுதிகளில் கோவிட் தடுப்பூசிகள் பற்றி விபரங்களை அரசுகள் வெளியிட்டுள்ளன. இந்தியாவிலும் மோடி அரசு அதைச் செய்ய வேண்டும்.

மாறாக, சில மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விவசாயிகள் போராட்டத்தால் மத்திய அரசு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் ஆதாயத்திற்காக, தடுப்பூசிசெலுத்துவதற்கான முறையான நடைமுறைசெயல்பாடுகளை முழுமையாக மேற்கொள்ளாமல் தவிர்ப்பது, இந்திய மருந்துத்துறை பல்லாண்டுகாலமாக உருவாக்கி வைத்துள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். 

பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அறிவியல்பூர்வமான தடுப்பூசிகளை வெற்றிகரமாக செலுத்திய பெருமைமிக்க வரலாறு கொண்டது இந்திய மருத்துவத் துறை. கோவிட் தடுப்பூசி விசயத்திலும் அந்த மாண்புகள் காக்கப்பட வேண்டும். இங்கு முக்கியம்இந்திய மக்களின் உயிர்தானே தவிர, மோடி அரசின் ஆதாயம் அல்ல.

;