headlines

img

பீதியில் பிதற்றும் மோடி

காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள். பிரதமர் நரேந்திர மோடிக்குகாண்பதெல்லாம் கலகக் கும்பல் போல் தெரிகிறது போலும். ஏனெனில் அவரது எஜமானர்கள் படை பரிவாரங்கள் எல்லாம் கலகக்கும்பலாக இருக்கும்போது எதிரில் தென்படுபவர்களும் கலகக் கும்பலாகத் தெரிவது இயல்புதானே. வியாழனன்று பீகார் மாநிலம் பகல்பூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, எதிர்க்கட்சிகளை கலகக் கும்பல் என்று சாடியுள்ளார். கலகக் கும்பல் பெரும் அச்சத்தில் உள்ளது. இதனால் மக்களிடையேயும் அவர்கள் பீதியை பரப்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார். பீதியை பரப்புவது, அச்சுறுத்தல், மிரட்டல், தாக்குதல், குண்டு வைத்தல், கொலைசெய்தல் எல்லாமே ஆர்எஸ்எஸ் - பாஜக படைபரிவாரங்களின் வாடிக்கையான நடவடிக்கைகளே. அதன் எடுத்துக்காட்டுகளை நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில், நிகழ்வுகளில், படுகொலைகளில், குண்டு வெடிப்புகளில், தீ வைப்புகளில் நாட்டு மக்கள் நன்றாக அறிந்தே வைத்துள்ளனர். எனவே புதிதாக எதிர்க்கட்சிகள் அதைப்பற்றி சொல்ல வேண்டியஅவசியம் ஏற்படவில்லை.


மோடி மேலும் பேசும்போது, மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஊழலில் ஈடுபட முடியாதோ என்ற அச்சமும், வாரிசு அரசியலில்ஈடுபட முடியாதோ என்ற அச்சமும் பாதுகாப்புக்கான ஒப்பந்தம் என்ற பெயரில் ஊழலில் ஈடுபடமுடியாதோ என்ற அச்சமும் அவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது என்றும் கூறியுள்ளார். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது என்பார்கள். மோடியின் நெஞ்சும் அப்படித்தான் பதறுகிறது. பாதுகாப்புக்கான ஒப்பந்தம் என்ற பெயரில் ஊழலில் ஈடுபட முடியாதோ என்று அவர் கூறுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லைஎன்று சொல்வதுபோல் உள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தலே நடக்காது என்றும் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கு பெரும்பாதிப்பு ஏற்படும் என்றும் இடஒதுக்கீட்டு முறையே இருக்காது என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் உண்மை நிலைத்திருக்கும் என்று கூறிய மோடியால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. 


ஏனெனில் ஒற்றை நபர் ஆட்சியையும் அரசியல் சட்டத்தை சீர்குலைப்பதையுமே நோக்கமாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வந்திருப்பதை நாடறியும். நாட்டு மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின்,ஜனநாயக அமைப்புகளின் பலத்த எதிர்ப்புகளாலே அவையெல்லாம் தற்காலிகமாக விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை நாட்டுமக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால்தான் மீண்டும் மோடியின் ஆட்சி மத்தியில் ஏற்படக்கூடாது என்று நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது. அதைக் கண்டு அஞ்சியே மோடி இவ்வாறு பிதற்றிக் கொண்டிருக்கிறார்.