ஊடகவியலாளர்களை சந்திப்பதை பிரதமர் நரேந்திர மோடி முற்றிலும் தவிர்த்து வருகிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடர்களிலும் அவர்பெரும்பாலும் பங்கேற்பதில்லை. அப்படியே கூட்டத்தில் கலந்து கொண்டாலும் எந்தவொரு பிரச்சனையிலும் பேசுவதில்லை. விவாதங்களுக்கு பதிலளிப்பதில்லை. இப்படி ஒரு பிரதமரை இந்தியா இதுவரை சந்தித்ததில்லை.
மாறாக, மனதின் குரல் என்ற பெயரில் எதிர்க்கேள்வி கேட்க வாய்ப்பில்லாத நிலையில் அவர்உரை நிகழ்த்தியுள்ளார். ஞாயிறன்று 69ஆவதுமனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேசியிருக்கிறார். அனேகமாக நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியை அரசு விளம்பரங்களோடு தடபுடலாக கொண்டாடக்கூடும். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்திய விவசாயத்தை லட்சக்கணக்கான சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றி விடுகிற சட்டங்கள் உரிய விவாதங்களுமின்றி, முறையானவாக்கெடுப்புமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீடு வகைதொகையின்றி அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பிரதமர் தொடர்ந்து சுயசார்பு குறித்து பேசி வருகிறார். தற்போது விவசாயிகள் மற்றும் கிராமங்கள் சுயசார்பு இந்தியாவின்ஆதாரங்கள் என்று புகழ்மாலை சூட்டியுள்ளார். இது ஏதோ சுயசார்பு விவசாயத்திற்கு இரங்கல் உரை வாசிப்பது போல இருக்கிறது.
பல்வேறு பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து தொடர்ந்து நீக்கப்பட்டுவருகின்றன. இதன்மூலம் அந்த பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கச்செய்யும் பொறுப்பிலிருந்து அரசு நழுவிக் கொள்கிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்குகூடுதலாக விலை கிடைக்கச் செய்வோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று தேர்தலின் போது வாய்ப்பந்தல் போட்டவர் தற்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்த கார்ப்பரேட்டுகளை நம்பியிருக்கும் நிலையை உருவாக்கியுள்ளார்.
இந்தியாவின் உயிர்நாடியாக விளங்கும் விவசாயத் துறையை அழிக்கும் மோடி அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய விவசாயிகள் போர்க்கோலம்பூண்டு போராடி வருகின்றனர். விவசாயிகளின் கிளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் வெம்மையான சூழ்நிலையில்தான் பிரதமர் விவசாயத்தை விதந்தோதியுள்ளார். தமிழகத்தில் திங்களன்று அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன போராட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த போராட்டங்களின் வெற்றியில்தான் தேசத்தின் எதிர்காலம் உள்ளது. பிரதமர் தனது உரையில் தமிழக வில்லுப்பாட்டு பாரம்பரியத்தை பாராட்டியுள்ளார். ஆனால் இவரது பாட்டுக்கு பின்பாட்டு பாட மக்கள் தயாராக இல்லை என்பதையே ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு உணர்த்துகிறது.