பிரதமர் மோடி அடிக்கடி டிஜிட்டல் இந்தியா குறித்து பேசி வருகிறார். டிஜிட்டல் பண பரிமாற்ற நிறுவனங்களின் நலனுக்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கைக்கு காரணமாக பிரதமர் மோடியால் சொல்லப்பட்ட கருப்புப் பண ஒழிப்பு, கள்ளப்பண ஒழிப்பு, தீவிரவாதிகளுக்கு பணம் கிடைக்கவிடாமல் செய்வது போன்ற எதுவும் நடக்கவில்லை. கருப்புப் பணம் முன்பைவிட பலமடங்கு ஆட்சியாளர்களின் ஆதரவுடன் வளர்ந்து வருகிறது.
ஆனால் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டிவரி விதிப்பில் கீழே விழுந்த நாட்டின் பொருளாதாரமும், பெரும்பகுதி மக்களின் பொருளாதாரமும் மீள முடியாமல் தவிக்கின்றன. இந்த நிலையில் ஆன்-லைன் சூதாட்டம் பலரது வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கின்றது.பல்வேறு காரணங்களுக்காக செல்போன் இல்லாமல் இனிமேல் உயிர் வாழ முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அதை பயன்படுத்தும்போது வந்து விழும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் பலரது வாழ்வை பலிவாங்கிக் கொண்டிருக்கின்றது. ஆன்-லைன் சூதாட்டத்தில் சிக்கி நாடு முழுவதும் பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.
மறுபுறத்தில் டிஜிட்டல் கடன் என்பது ஒரு புதிய அபாயமாக உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே உள்ள கந்துவட்டியின் டிஜிட்டல் வடிவம்தான் இது. கடன் கேட்டவுடன் கிடைக்கும், நேரில் வரத் தேவையில்லை. த்தரவாதம் தேவையில்லை, அடமானம் தேவையில்லை, கெடுபிடிகள் இல்லை என்ற அறிவிப்புகள் மூலம் பற்றாக்குறையினால் திண்டாடுபவர்களை குறிவைக்கின்றனர்.
கடனை திரும்பச் செலுத்துவது தாமதமானால் இவர்கள் கொடுக்கும் தொல்லைகளுக்கு அளவு இல்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். அடியாட்களை வீட்டுக்கு அனுப்பி ஆபாசமாக திட்டுவது, அடுத்தக்கட்டமாக அந்த போனில் தொடர்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் வாட்ஸ்-அப் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி சம்பந்தப்பட்டவர் கடன் வாங்கி திருப்பிச்செலுத்தவில்லை என்று கூறி அவமானப்படுத்துவது, பொய்யான நோட்டீஸ்அனுப்புவது என பலவகையான சித்ரவதை
களுக்கு உட்படுத்துகின்றனர்.
அடுத்தக் கட்டமாக எஸ்எம்எஸ் மூலம் வைரஸை அனுப்பி மொத்த செல்போனையும் செயலிழக்கச் செய்துவிடும் என்றும் மிரட்டுகின்றனவாம். இவ்வாறு பலரது போன் செயலிழக்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வட்டிக்கு வட்டி, அபராத வட்டி, ஜிஎஸ்டி என அடுத்தடுத்து தொகையை ஏற்றி மீளமுடியாத அளவுக்கு கடன் வலையில் எளிய மற்றும் நடுத்தர மக்கள் தள்ளிவிடப்படுகின்றனர்.
மத்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் மூலம் கடன் பெறுவதற்கான நெறிமுறைகளை அறிவித்தது. ஆனால் ஏமாற்றும் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிப்பு விடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதுகின்றனர். இத்தகைய மோசடி டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள்தற்கொலை போல டிஜிட்டல் கடன் தற்கொலையும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.