திங்கள், ஜனவரி 25, 2021

headlines

img

பொள்ளாச்சி கொடூரம்... வேர் வரை விசாரித்திடுக....

இந்தியாவையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆளுங்கட்சியினர் தப்பவிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தற்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்படபல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து காணொளி எடுத்து பணம்பறித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வெளியான காணொளிக் காட்சிகள் அனைவரையும் உறைய வைத்தது. 

எனினும் இந்த வழக்கை தமிழக போலீசார் முறையாக கையாளவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்ணுரிமை அமைப்புகளும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதன் காரணமாகவே சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார் என நால்வர் கைது செய்யப்பட்டனர். மணிவண்ணன் என்பவர் சரணடைந்தார். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு செய்ததன் அடிப்படையில் அவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடும் போராட்ட அழுத்தம் காரணமாக சிபிசிஐடி போலீசாரிடமிருந்து விசாரணை சிபிஐயிடம் மாற்றப்பட்டது. மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ஹேரேன்பால், பாபு, அருளானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருளானந்தம் என்பவர் அதிமுக மாணவரணி நகரச் செயலாளராக பதவி வகிப்பதோடு, ஆளுங்கட்சி ஆதரவுடன் பல டாஸ்மாக் பார்களையும் நடத்தி வருபவர். 

அருளானந்தம் அமைச்சர் வேலுமணி, துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதிமுக நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் என்பவரின் நெருங்கிய கூட்டாளியாகவும் அருளானந்தம் இருந்துள்ளார். இப்போது வேறு வழியின்றி அருளானந்தம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகனுடன் கைது செய்யப்பட்ட கும்பல் நெருக்கமாக இருந்ததற்கான புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு இந்தசம்பவத்தில் உள்ள தொடர்பு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை.

எங்களுக்கு இதில் சம்பந்தமில்லை என அதிமுகவினர் கூறி வந்த நிலையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரித்து உரிய தண்டனைவழங்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவருவது அதிர்ச்சியளிக்கிறது. எனவே இந்த கொடூரமான சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவதன் மூலமே மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
 

;