குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த அபாயகரமான சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள முதல் மாநில அரசு கேரளம்தான் என்பது பெருமைக்குரியது. இந்த நடவடிக்கை மூலம் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் ஏனைய மாநில அரசு களுக்கு கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு வழிகாட்டியுள்ளது.
மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத் திருத்தம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என கேரள அரசு தன்னுடைய மனுவில்கூறியுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தையும், இதன் அடிப்படையிலான தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை யும் கேரளத்தில் நடைமுறைப்படுத்தப் போவ தில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக மோடி அரசின் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது என்றும் இந்த சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறியுள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாடி இருப்பது குறித்து தன்னிடம் எதுவும் தெரிவிக்க வில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். மேலும் இதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் இத்தகைய வழக்கு தொடுப்பது மாநில அரசின் உரிமை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டியதில்லை என்று அவரே ஒத்துக்கொண்ட நிலையில், அவரிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவாகிறது. இந்தப் பிரச்ச னையில் தொடர்ந்து வரம்பு மீறி வருவது கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தான்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கேரள சட்டமன்றம் நிறை வேற்றிய தீர்மானத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. எந்தவொரு விசயத்திலும் தீர்மானம் நிறை வேற்றுவதற்கு மாநில சட்டமன்றத்திற்கு உரிமை உண்டு. அதை கேள்விக்குள்ளாக்கியதன் மூலம் பாஜகவின் கைப்பாவையாக கேரள ஆளுநர் செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியது.
கேரள சட்டமன்றம் மற்றும் கேரள அரசு மக்களால் தேர்வு செய்யப்பட்டது. மாநில மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது மாநில சட்டமன்றம் மற்றும் மாநில அரசின் கடமை. இதில் தொடர்ந்து அத்துமீறி கருத்து தெரிவித்து வரும் கேரள ஆளுநர் அடக்கி வாசிப்பது நல்லது.