headlines

img

நாடாளுமன்ற ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும்....

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தை நாடுஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 2001ஆம் ஆண்டு டிசம்பர்13 ஆம் தேதி நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதுதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலின் போது பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட9 பேர் பலியானார்கள். அவர்களது தியாகத்தால் மிகப் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. அந்தவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் கடமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. 

இந்த நாளையொட்டி வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதேநேரத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இவரதுதலைமையிலான அரசு எந்தளவுக்கு கீழிறக்கம் செய்து கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இதுவரை இருந்த பிரதமர்களிலேயே நாடாளுமன்றத்திற்கு மிக குறைந்த நாட்களே வருகை தருபவராக மோடி இருந்து வருகிறார். நாட்டின்மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றம் விவாதித்துக் கொண்டிருக்கும் போது கூடபிரதமர் என்ற முறையில் இவர் அவைக்கு வருவதில்லை. வந்தாலும் விவாதத்திற்கு பதிலளிப்பதில்லை. அதைவிட வெளிநாட்டு பயணங்களுக்கே அவர் முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இவரது வெளிநாட்டு பயணங்கள் சமீப மாதங்களில் நடைபெறவில்லை. 

இது ஒருபுறமிருக்க, கொரோனா பெருந் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் அனைவரும் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்றார். புதிய நாடாளுமன்றம்  மற்றும் அலுவலகங்கள் கட்ட பட்ஜெட்டில் 20 ஆயிரம் கோடிஒதுக்கப்பட்டுள்ளது. புதிய  நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். இந்த திட்டத்திற்கு ஆட்சேபணை தெரிவித்து 1292 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தும்கூட மத்தியசுற்றுச்சூழல் துறை இதற்கு அனுமதி அளித்துள்ளது. நாட்டின் பெரும் பகுதி மக்கள் வறுமையின்பிடியில் சிக்கியுள்ளபோது இந்த திட்டம் தேவைதானா என்ற கேள்விக்கு பிரதமர் செவிசாய்க்க மறுக்கிறார்.

நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளையும், விதிகளையும் கூட துச்சமென மதிக்கிறது மோடி அரசு. அண்மையில் நிறைவேற்றப்பட்டு விவசாயிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள வேளாண்சட்ட திருத்த மசோதாக்கள் மீதும் உரிய விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படவில்லை. இதேபோல பல்வேறு முக்கியமான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மதிப்பளிக்காமல்  அராஜகமாக நிறைவேற்றப்பட்ட முன்னுதாரணங்கள் உண்டு.அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தக்கூடியவை. ஆனால்தேர்தல் ஆணையம் உட்பட பல்வேறு அமைப்புகள் இந்த அரசினால் சீர்குலைக்கப்படுகின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பிரம்மாண்டமான கட்டிடங்களில் மட்டும் இல்லை என்பதைஇந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.