மத்திய பாஜக கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்று தலைநகர் தில்லியில் விவசாயிகள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராடும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாட்டையும், ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் செவ்வாயன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. மறியல், ஆர்ப்பாட்டம் என நாடே போர்க்களமாக காட்சியளிக்கிறது.
விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேச மறுக்கிறார். இப்படி ஒரு போராட்டம் தலைநகரில் தொடர்ந்துநடைபெற்று வருவதை அவர் கண்டுகொள்ள மறுக்கிறார். அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியடையும் நிலையில் நேரடியாக விவசாயிகளிடம் பேசபிரதமருக்கு மனமில்லை. இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானது என்று பாஜக மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரத்தை நம்ப இந்திய விவசாயிகள் தயாராகயில்லை. அதனால்தான் போராட்டம் மேலும் மேலும் உக்கிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் ஆக்ரா மெட்ரோ ரயில்திட்ட கட்டுமானப்பணி துவக்க விழாவில் பேசியபிரதமர் நரேந்திர மோடி, கடந்த நூற்றாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள் அப்போது சிறந்தவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலத்திற்கு அவை சுமையாகமாறியுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியம் என்று விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் தம்முடைய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.
கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அப்படியே இருக்க வேண்டுமென்று யாரும் கூற மாட்டார்கள். இந்திய அரசியல் சட்டத்திலேயே பலமுறை திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு கொண்டு வரப்படும் திருத்தங்கள், புதிய சட்டங்கள் யாருக்கு ஆதரவானவை என்ற அடிப்படையில்தான் பரிசீலிக்க வேண்டும்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண்திருத்தச் சட்டங்கள் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் கைமாற்றி விடுவதற்கான நோக்கம் கொண்டது. அதேபோல மின்சாரத்தைமுழுக்க முழுக்க விற்பனை சரக்காக்கி அதையும்தனியாருக்கு தருவதே மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தச் சட்டங்களின் நோக்கம். இந்தவஞ்சகத்தை புரிந்து கொண்டதால்தான் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இதை வாபஸ்பெற்றால் கார்ப்பரேட்டுகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். அடக்குமுறை மூலம்விவசாயிகளை மோடி அரசு மிரட்டுகிறது.தொழிலாளர் நலச் சட்டங்கள் முதலாளிகளின் யோசனைக்கேற்ப மாற்றி விட்டு அதற்கு சீர்திருத்தம் என்று பெயர் வைத்தாலும் அதன் நோக்கம் தொழிலாளிகளின் உரிமைகளை சீர்குலைப்பதேயாகும். சீர்திருத்தம் என்ற பெயரில் தற்போது நடப்பதெல்லாம் சீர்கேடேயன்றி வேறல்ல.