games

img

தேசிய ஓபன் தடகள போட்டியின் கடைசி நாளில் தமிழகத்திற்கு மேலும் 2 தங்கப்பதக்கம்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசி நாளில் தமிழகத்திற்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிட்டியது.

60வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில், கடைசி நாளான நேற்று தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கம் கிட்டியது. ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதலில் (டிரிபிள் ஜம்ப்) தமிழக வீரர் பிரவீன் சித்திரைவேல் 16.88 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.  சர்வீசஸ் வீரர் அப்துல்லா அபூபக்கர் 16.84 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார். 

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா (23.58 வினாடி) முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்றார். டெல்லியின் ‘இளம் புயல்’ தரன்ஜீத் கவுர் (23.64 வினாடி) வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அசாம் வீரர் அம்லான் போர்கோஹைன் புதிய போட்டி சாதனையுடன் (20.75 வினாடி) தங்கப்பதக்கமும், தமிழகத்தின் பாலகுமார் நிதின் வெள்ளிப்பதக்கமும் (21.06 வினாடி) வென்றனர். இந்த தொடரில் தமிழக வீராங்கனை வித்யா 400 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், கலப்பு தொடர் ஓட்டம் ஆகிய 3 பந்தயங்களில் தங்கப்பதக்கத்தை வென்றார்.

5 நாட்கள் நடைபெற்று இந்த போட்டியில் ரெயில்வே 13 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என்று 36 பதக்கங்களுடன் முதலிடத்தையும், தமிழ்நாடு 7 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என்று 16 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், சர்வீசஸ் அணி 6 தங்கம் உள்பட 30 பதக்கத்துடன் 3வது இடத்தையும் பிடித்தன.

;