games

img

‘நம்பர் ஒன்’ வீராங்கனையும் ஒலிம்பிக் கனவும்

இந்திய பேட்மிண்டன் உலகில் சானியா நேவால்,  வி.பி.சிந்து, கோபிசந்த் போன்ற நட்சத்திரங் களால் சாதிக்க முடியாததை வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான தஸ்னிம் மீர் 16 வயதில் சாதித்து வர லாறு படைத்திருக்கிறார். இந்த ஒரு நிலையை எட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பும், கனவும் கூட. ஆனா லும், விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே அத்தகைய சாதனையை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். அதில் ஒருவர்தான் தஸ்னிம் மீர். பல்கேரியா, பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்யா, நேபாளம், துபாய் என்று பல நாடுகளுக்கும் சென்று வெளிநாட்டு வீராங் கனைகளுடன் போட்டியிட்டு வெற்றிகளை குவித்து கடந்த  20021 ஆம் ஆண்டு சீசனை வெற்றிகரமாக முடித்த வளரும் வீராங்கனையாவார்.

முதல் இந்தியர்...'

ஜூனியர் தரவரிசை பட்டியலில்  உலகின் ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் தஸ்னிம். இந்திய பேட்மிண்டன் உலகில்  சர்வதேச அளவில் முதல் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். இஸ்லாமிய குடும்பம்... 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவின் ‘நம்பர்  ஒன்’ வீராங்கனையாக உருவெடுத்திருக்கும் அவருக்கு வயது 16. குஜராத் மாநிலம் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இந்த இளம் தளிர் இந்தியாவின் பெருமையை உலகுக்கு பறைசாற்றி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. குஜராத் மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் இர்பான் மீர், பேட்மிண்டன் ஆர்வம் உள்ளவர். ஆனாலும், காவல்துறை பணியால் தன்னால் சாதிக்க முடியாததை மகள் தஸ்னிம் சாதிக்க வேண்டும் என்பதற்காக 7 வயதில் பயிற்சி கொடுத்திருக்கிறார். தொடர்ந்து பயிற்சிக்காக கவுகாத்தியிலுள்ள அசாம் பேட்மிண்டன் பயிற்சி மையத்தில் சேர்த்தார். வலது கை வீராங்கனையான தஸ்னிம், பயிற்சியின் போது பெண்களுடன் மட்டுமின்றி ஆண்கள் பிரிவு வீரர்களு டன் பயிற்சி எடுத்தது ஒரு சிறந்த அனுபவமாகவும் அமைந்திருக்கிறது. இது அவரை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவியது.

இளம் சாம்பியன்...

பேட்மிண்டன் விளையாட்டில் 13,15,19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மிக இளம் வயதிலேயே கலந்து கொண்டு வெற்றிகரமாக வலம் வந்த தஸ்னிம், 14 வயதில்  முதன்முதலாக தேசிய ஜூனியர் பட்டத்தை வென்று அசத்தி னார். 2018 ஆம் ஆண்டில் ஹைதராபாத், நாக்பூரில் நடை பெற்ற அகில இந்திய சப் ஜூனியர் போட்டிகளில் ஒற்றை யர் மற்றும் இரட்டையர் பட்டத்தை வென்றார். 2019 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை தவற விட்டாலும் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன் பட்டங்களை வென்று சாதித்தார்.  அதன் தொடர்ச்சியாக, நேபாளம் நாட்டின் காத்மாண்டு வில் நடைபெற்ற பிரசிடெண்ட் கோப்பை, நேபாள ஜூனியர் சர்வதேச தொடர்களில் கோப்பையை வென்று வந்தார். 2021 ஆம் ஆண்டு இறுதியில் டென்மார்க்கில் நடைபெற்ற உபேர் கோப்பையையும் கைப்பற்றினார். உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய மைதானங்களில் விளையாடி வெற்றி பெற்றதும், கோப்பைகளை வென்றதும், சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியதும் பேட்மிண்டன் உலகில் அவரது தரத்தை மேலும் உயர்த்தியது.

யாரும் நெருங்காத சாதனை...

தஸ்னிம் எப்போதும் தனது இலக்குகளை அடைய  கடினமாக உழைக்கிறார். அவர் குழந்தை பருவத்திலிருந்தே  ஒரு சாதனையாளராகவும் இருந்து வருகிறார். பல்வேறு பிரிவுகளில் 22 போட்டிகளை வென்றிருக்கிறார். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளிலும் இரண்டு முறை ஆசிய சாம்பியன் பட்டத்தையும் வென்றும் சாதித்திருக்கிறார். இப்போது சீனியர் பிரிவில் விளையாடுவதற்கு இந்தோனேசியாவின் எட்வின் இரியவானிடம் சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார். இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து 19 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தை மட்டுமே பிடித்தார். மற்றொரு ஒலிம்பிக் வீராங்கனையான சாய்னா நேவால் முதல் 5 இடத்தைக் கூட நெருங்கவில்லை. தெலுங்கானாவை சேர்ந்த  சாமியா இமாத் ஃபருக்கி உலக ஜூனியர் முதலிடத்துக்கு நெருங்கி வந்தாலும் இரண்டாவது இடத்தை மட்டுமே எட்ட  முடிந்தது. எந்த ஒரு இந்திய வீராங்கனைகளும் சாதிக்க முடியாததை சாதித்தும் காத்திருக்கிறார் தஸ்னிம்.

ஏணிப்படிகள்...

வெற்றி என்பது ஒரே இரவில் வந்துவிடாது. மேலும் தஸ்னிம் மிரும் உச்சத்தை அடைய தன் வாழ்நாள் முழுவதும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இந்த உயரத்தை அவரால் மிக எளிதில் எட்ட முடியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் நிதி ஒரு  பெரும் பிரச்சனையானது. இந்த நிதி நெருக்கடியால் விளை யாட்டை பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டார். பின்னர் ஸ்பான்சர் கிடைத்ததும் திரும்பவும் பேட்மிண்டன் ‘ராக்கெட்டை’ கையிலெடுத்தார். ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் வரை மேற்கொண்ட பயிற்சியும் கடினமாக உழைத்ததாலும் இன்றைக்கு அவரால் சாதிக்க முடிந்தது. தந்தை-தாய் மட்டுமன்றி சகோதரர் முகமது அலி மீரும், தஸ்னிம் வெற்றிக்காக நிறைய தியாகம் செய்திருக்கின்றனர்.

பேட்மிண்டன் விளையாட்டில் தனது முன்னோடிகளை பின்பற்றி விளையாட தொடர்ந்து முயற்சி செய்து வரும் தஸ்னிம், இனிவரும் காலங்களில் மூத்த வீரர்களுடன் சீனியர்  பிரிவில் எப்படி விளையாட வேண்டும்? வெளிநாட்டு வீராங்கனைகளை எதிர்கொள்வது எப்படி? என்று புதிய புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு வருகிறார். ஜூனியர் பிரிவு வரலாற்றுப் புத்தகங்களில் தஸ்னிம் மீர், தன் பெயரை எழுதியிருந்தாலும், இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் பாரீஸ் ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டு பயிற்சி மேற்கொண்டு வரும் அவர், இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்று நினைக்கிறார். சிந்து, நேவால் போலவே ஒலிம்பிக் போட்டியில் விளையாடி பதக்கம் வென்று தேசத்தை பெருமைப்படுத்த வேண்டும் என்பதே அவரது இலக்கு. அதுவே அவரது கனவு.

- சி.ஸ்ரீராமுலு



 

;