8-வது சீசன் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் ஞாயிறன்று தொடங்குகிறது. நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் முதல் 6 நாட்கள் அதாவது அக்., 21-ஆம் தேதி வரை தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன் பிறகு தகுதி சுற்றில் இருந்து தேர்வாகும் 4 அணிகளுடனும், “சூப்பர் 12” சுற்றுக்கு நேரடி தகுதி பெற்ற 8 அணிகள் என 12 அணிகளுடன் 22-ஆம் தேதி “சூப்பர் 12” சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.
ரூ.46 கோடி
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.46 கோடியாகும்.
சாம்பியன் பட்டம் : ரூ. 13.18 கோடி
2-ஆம் இடம் : ரூ. 6.59 கோடி
இதுபோக அரையிறுதி, “சூப்பர் 12” வெளியேற்றம், தகுதி சுற்று வெளியேற்றம், ஒவ்வொரு ஆட்டத்தின் வெற்றி என அனைத்திற்கும் போதுமான அளவு பரிசுத்தொகை உள்ளது.
அணிகள் விபரம்:
தகுதி சுற்று அணிகள் - 8
இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம்.
“சூப்பர் 12” நேரடி தகுதி - 8
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா
கண்டங்களும்... அணிகளின் எண்ணிக்கையும்...
தகுதிச் சுற்று சேர்த்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அதிகபட்சமாக ஆசிய கண்டத்தில் இருந்து 6 அணிகள் பங்கேற்கின்றன. குறைந்த பட்சமாக வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து ஒரு அணியும் கலந்து கொள்கிறது.
ஆசியா - 6 (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான்)
ஐரோப்பா - 4 (இங்கிலாந்து,அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து)
ஆப்ரிக்கா - 3 (தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா)
ஆஸ்திரேலியா - 2 (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து)
வட அமெரிக்கா - 1 (மேற்கு இந்தியத் தீவுகள்)
கோப்பையை வெல்வதற்கான பார்மில் உள்ள அணிகள்:
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கி லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா (இதில் இந்தியா, நியூசி லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் கிடைக்கும் வாய்ப்பை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும். பிறகு கோப்பையை பற்றி சிந்திக்க லாம்)
மைதானங்கள் மொத்தம் 7 மைதானங்களில் உலகக் கோப்பை நடைபெறுகிறது. மெல்போர்ன் (இறுதி போட்டி மற்றும் முக்கியமான ஆட்டங்கள்), சிட்னி,ஹோபர்ட், பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த், சிமோன் ட்ஸ் மைதானம் (கீலாங்)
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை (சூப்பர் 12) 23-ஆம் தேதி எதிர்கொள்கிறது.
இந்திய அணி எப்படி?
முதல் டி-20 (2007) உலகக்கோப்பை சாம்பியனான இந்திய அணி, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற 6-வது சீசனில் கடுமையாக போராடி கோப்பையை இழந்தது. அதன் பிறகு பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த முறையாவது உலகோப்பையை கைப்பற்றும் நோக்கில் மிக தீவிரமாக களமிறங்கும் இந்திய அணியின் பிளஸ், மைனஸ் பாயிண்டுகளை பார்ப்போம்: பிளஸ் : 8-வது சீசன் உலகக்கோப்பையில் ஐபிஎல் அனுபவத்துடன் குறிப்பிட்ட அளவு சீனியர் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு மிகவும் பலமாகவே களமிறங்குகிறது.
பேட்டிங், ஆல்ரவுண்டர் பிரிவில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியா அணி கூடுதல் பலத்துடன் உள்ளது. எந்த விதத்தில் ஆடும் லெவன் தேர்வு செய்யப்பட்டாலும் 8 வீரர்கள் பேட்டிங் செய்வார்கள். மைனஸ்: உலகின் அபாயகரமான ஆல்ரவுண்டரான ஜடேஜா காயம் காரணமாக இல்லாதது அணியின் மிகப்பெரிய மைனஸ் ஆகும். பும்ரா, தீபக் சாகர் இல்லாத சூழலில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் 3 சுழற்பந்துவீச்சு எதற்கு என்ற கேள்வி எழுந்து வருகிறது. பார்ம் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் புவனேஸ்வர்குமார், ஹர்ஷல் படேல் ஆகியோரை ஏன் அணியில் சேர்த்தார்கள் என்று புரியவில்லை. இதுபோக சூப்பர் பார்மில் இருக்கும் மிரட்டல் வேக நாயகனும், காஷ்மீர் எக்ஸ்பிரஸ் புனைபெயர் உடைய உம்ரான் மாலிக் அணியில் சேர்க்காமல் இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் இல்லை, அவர் இல்லை என அணியில் குறை கூறலாமே தவிர பார்ம் பிரச்சனை பற்றி எதுவும் திடமாக கூற முடியாது. காரணம் யார் எப்படி விளையாடுகிறார்கள் என்றே கணிக்க முடியவில்லை. மொத்தத்தில் ஒரு ஐபிஎல் தொடருக்கான அணியை தேர்வு செய்து உலக்கோப்பைக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைத்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். பலமான வீரர்கள், மிரட்டல் பார்ம் என சகல வசதிகள் இருந்தாலும் இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது போல போராட்டம் இன்றி விளையாட பழகி வரும் தன்மையை முற்றிலும் மாற்றினால் கோப்பையை பற்றி எதிர்பார்க்க முடியும். இல்லையென்றால் “சூப்பர் 12” சுற்றோடு ஆஸ்திரேலியாவை சுற்றி பார்த்து இந்தியா திரும்ப வேண்டியது தான்.
வீரர்கள் விபரம்
கேப்டன் : ரோஹித் சர்மா (பேட்டிங்)
பேட்டிங் : விராட் கோலி, சூர்ய குமார்
விக்கெட் கீப்பர் : தினேஷ் கார்த்திக், கே.எல் ராகுல், ரிசப் பண்ட்
ஆல்ரவுண்டர் : ஹர்திக் பாண்டியா, ஆர்.அஸ்வின், அக்ஸர் படேல், தீபக் ஹூடா
பந்துவீச்சு : முகமது ஷமி, புவனேஷ்வர், ஹர்ஷல் படேல், சஹால், அர்ஷதீப் சிங்
மாற்று வீரர்கள் : ஸ்ரேயாஸ், ரவி பிஸ்னோய், முகமது சிராஜ், ஷர்தூல் தாக்கூர்