உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் - 2024
டக்வொர்த் லூயிஸ் விதிப்படி
வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா
மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரில் தற்போது “சூப்பர் 8” சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளியன்று நடைபெற்ற “சூப்பர் 8” சுற்றின் 4ஆவது ஆட்டத்தில் வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டம் மழையால் தடைப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டநிலையில், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் ஹாட்ரிக் (விக்கெட்) சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது வெற்றியை ருசிக்குமா இந்தியா?
இன்று வங்கதேசத்துடன் மோதல்
“சூப்பர் 8” சுற்றில் “குரூப் 1” பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், தனது 2ஆவது “சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் டாப் ஆர்டரில் பயணிக்கும் முனைப்பில் வங்கதேசம் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டங்கள்
அமெரிக்கா - மேற்கு இந்தியத் தீவுகள்
இடம் : பார்படாஸ், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6:00 மணி
இந்தியா - வங்கதேசம்
இடம் : ஆன்டிகுவா, மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : இரவு 8:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
ஐரோப்பிய கோப்பை கால்பந்து - 2024
இத்தாலி அதிர்ச்சி தோல்வி
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று அதிகாலை நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இத்தாலி - ஸ்பெயின் (“குரூப் ஏ”) அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஸ்பெயின் வீரர் ரிக்கார்டோ (55’) கோலடித்தார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்த நிலையில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டங்கள்
ஜார்ஜியா-
செக்குடியரசு
நேரம் : மாலை 6:30 மணி
துருக்கி - போர்ச்சுக்கல்
நேரம் : இரவு 9:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஹாட் ஸ்டார் (ஒடிடி)
துவங்கியது கோபா அமெரிக்கா 2024
தொடக்க ஆட்டத்தில் அர்ஜெண்டினா அபார வெற்றி
உலகக்கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் இந்திய நேரப்படி வெள்ளியன்று அதிகாலை தொடங்கியது. தென் மற்றும் வட என இரு அமெரிக்க கண்டங்களிலும் 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த கோபா அமெரிக்கா தொடரின் தொடக்க ஆட்டத்தில் உலக சாம்பியனான அர்ஜெண்டினா கனடாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.