games

img

விளையாட்டு...

கால்பந்து விளையாட்டில் கவலையை ஏற்படுத்தும் “இனவெறி” சர்ச்சை

ஒரே ஒரு சம்பவத்தால் சிறப்பை இழந்த “லா லிகா”

சமீப காலமாக கால்பந்து விளையாட்டில் “இனவெறி” சர்ச்சை மிக அதிகமாக நிகழ்ந்து வரும் நிலையில், ஸ்பெயின் கிளப் தொடரான “லா லிகா” தொடரில் கடந்த மே 21 அன்று நடைபெற்ற ரியல் மாட்ரிட் - வேலன்சியா அணி களுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தின் பொழுது ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி வீரரும்,  பிரேசில் நாட்டவருமான வினிசியஸ் ஜூனியர் மீது ரசிகர்களின் இனவெறி கூச்சல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

குரங்கு

கருப்பினத்தைச் சேர்ந்தவரான வினிசியஸ் ஜூனியரை வேலன்சியா ரசிகர்கள் 7 பேர் குரங்கு (மனித குரங்கு - கருப்பினத்தை குறிக்கும்) என்று அழைத்தார்கள். இதனை வினிசியஸ் ஜூனியர் உள்ளிட்ட ரியல் மாட்ரிட் வீரர்கள் தட்டிக்கேட்க வெடித்தது மோதல். ஒரு குழு ரசிகர்கள் மீண்டும் “குரங்கு”, “குரங்கு” என கத்தியதால்  போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு பின்னர் வினிசியஸ் போட்டியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லை. ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து விளையாடினார்.

வேலன்சியா வீரர்களும், நடுவர்களும் தாக்குதல்

வேலன்சியா ரசிகர்கள் வாய்வழி இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், வேலன்சியா வீரர்கள் காயம் ஏற்படும் அளவிற்கு தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டனர். இதை எல்லாம் சமாளித்து விளையாட ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர்  வேலன்சியா வீரர் ஒருவரை தாக்கிவிட்டதாக கூறி அவருக்கு “ரெட் கார்டு” கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். வேலன்சியா வீரர்கள், ரசிகர்கள், நடுவர்கள் என அனைவரும் இனவெறியுடன் செயல்பட்டதால் வினிசியஸ் ஜூனியர்,“இனவெறி தாக்குதலின் உச்சம்” இது என்று குற்றஞ்சாட்டி, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். மோதலுக்கு இடையே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வேலன்சியா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அரசுடன் களமிறங்கிய லாலிகா

வினிசியஸ் ஜூனியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் குவிந்து வரும் நிலையில், பிரேசில் - ஸ்பெயின் இடையே அரசாங்க மோதல் கூட உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் பிரேசில் ஜனாதிபதி வினிசியஸ் ஜூனியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்பெயின்  அரசை நோக்கி வெளிப்படையாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அலறிய ஸ்பெயின் அரசாங்கம், வினிசியஸ் ஜூனியருக்கு எதிராக பட்டியலிட்ட 10 முறை நடந்த இனவெறி கூச்சலிட்டவர்களை கைது செய்யவும், இதுதொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட நிலையில், ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குழு, ஸ்பெயின் அரசுடன் இணைந்து இனவெறி கூச்சலிட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.

“பாசிசம் மற்றும் இனவெறி ஆதிக்கங்கள் உயிர்த்தெழ அனுமதிக்கமாட்டோம்”

பிரேசில் ஜனாதிபதி கண்டனம்

லா லிகா தொடரில் வினிசியஸ் ஜூனியர் மீது நடத்தப்பட்ட 10-வது “இனவெறி தாக்குதல்” ஆகும். இதற்கு முன்னர்,”விளையாடுவதை நிறுத்திவிடு குரங்கே” என்று இனவெறி கருத்திற்கு உள்ளானார் வினிசியஸ். ஆனால் “இனவெறி தாக்குதலுக்கு” ஆதரவாக இருப்பது போல லா லிகா நிர்வாகம் அமைதி காத்து வந்த நிலையில், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,”21 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலிலும், ஐரோப்பாவின் பல கால்பந்து மைதானங்களில் இனரீதியான எண்ணங்கள் வலுபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பிபா, ஸ்பானிஷ் லீக் மற்றும் பிற நாடுகளில் உள்ள லீக்குகள் அனைத்தும் இனவெறி எண்ணங்களுக்கு எதிராக, உண்மையான நடவடிக்கை எடுப்பது முக்கியம். ஏனெனில் கால்பந்து மைதானங்களில் பாசிசம் மற்றும் இனவெறி ஆதிக்கங்கள் உயிர்த்தெழ அனுமதிக்கக்கூடாது” என்று கூறியிருந்தார். நட்சத்திர வீரர் மாப்பே, ரியோ பெர்டினாண்ட் மற்றும் பார்முலா ஒன் வீரர் லூயிஸ் ஹாமில்டன், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) என பல்வேறு தரப்பினர் கண்டனத்தை தெரிவித்தனர்.

ஆதரவு மழையால் மதிப்புமிக்க நபரானார் “வினிசியஸ்”

“இனவெறி” தாக்குதலுக்கு உள்ளான “வினிசியஸ் ஜூனியருக்கு” உலகம் முழுவதும் ஆதரவு மழை பொழிந்து வருகிறது. ஸ்பெயினில் 90% மக்கள் இதுதவறானது என கூறி வினிசியஸ் ஜூனியருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். மேலும் லா லிகா கால்பந்து தொடர், ஐரோப்பா நாட்டில் நடைபெறும் மற்ற தொடர்களிலும் இனவெறிக்கு எதிராக குரல் கிளம்பியுள்ளது.  வினிசியஸ் விளையாடும் அணியான ரியல் மாட்ரிட் அணி  “இனவெறி” தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “நோ ராக்சிசம்” ஜெர்சியில் “வினி ஜேஆர்” என்ற பெயரை ஒரே மாதிரியாக அணிந்து நாங்கள் இனவெறிக்கு எதிராகவும், வினிசியஸிற்கு ஆதரவாக உள்ளோம் என உணர்த்தியுள்ளனர்.இப்படி பல்வேறு சம்பவங்களால் ஹீரோ அந்தஸ்தில் மதிப்புமிக்க நபரானார் “வினிசியஸ் ஜூனியர்”.


 



 

;