games

img

ஐரோப்பிய கால்பந்து போட்டி.... இத்தாலி சாம்பியன்... 53 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை வென்றது....

லண்டன்:
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டியில்  இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி அணி.16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி  இங்கிலாந்து நாட்டில் ஜூன்  மாதம் 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.  ஜூலை 12 அன்று லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில்  இத்தாலி- இங்கிலாந்து அணிகள் மோதின.  

ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷா கோலடித்தார்.  இந்த கோல் 1 நிமிடம் 57 வது வினாடியில் அடிக்கப்பட்டது. இது யூரோ சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அடித்த வேகமான கோல் ஆகும்.இரண்டாவது பாதியில் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியானார்டோ போனுசி கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் முயன்று கோல் அடிக்க முடியவில்லை. 

பின்னர் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.  இங்கிலாந்து அணி 2 கோல்களே அடித்தது.இத்தாலி அணி 3 கோல்கள் அடித்து   வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான் 1968 ஆம் ஆண்டில் யூரோ கோப்பையை வென்றது. 53 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இத்தாலி யூரோ கோப்பையை வென்று அசத்தியுள்ளது.  இத்தாலி அணி அனைத்து ஆட்டங்களையும் சேர்த்து மொத்தத்தில் ரூ.300 கோடி பரிசாகப் பெற்றுள்ளது.

55 ஆண்டுகளுக்குப் பின் முக்கியப் போட்டி ஒன்றில் பட்டம் வெல்லும் கனவுடன்  களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணிலேயே தோற்றது. கடந்த 1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில்  இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின்னர் சர்வதேச கால்பந்துப் போட்டியில் பட்டம் வென்றதில்லை. இந்த முறையும்  வெற்றியை அடைய முடியாததால் இங்கிலாந்து அணியினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ரொனால்டோவுக்கு கோல்டன் பூட் 

யூரோ கோப்பை தொடரில் அதிகமான கோல்களை அடித்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பூட் (தங்க  ஷூ ) விருது போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.அவர் அடித்த  5 கோல்களில் 3 கோல்களை பெனால்டி சூட் முறையிலும் 2 கோல்களை ஹங்கேரி, ஜெர்மனி அணிக்காகவும் அடித்துள்ளார். 

ஒரு கோல் அடிக்க ரொனால்டி பாஸ் செய்துள்ளார். இந்த அடிப்படையில் ரொனால்டோவுக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது. செக் குடியரசு அணியின் ஃபார்வேர்ட் வீரர் பாட்ரிக் ஷிக் 5 கோல்கள் அடித்தபோதிலும், டைபிரேக்கர் முறையில் ரொனால்டோவுக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது.யூரோ கோப்பை தொடரில் அதிகமான கோல்களை அடித்த வீரர் என்ற வகையில் 14 கோல்களுடன் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். 

புதிய சாதனை படைத்த போனுசி

இறுதிப் போட்டியில் ஆட்டநேரத்தில் ஒரு கோலையும், பெனால்டி சூட் முறையில் ஒரு கோலையும் அடித்த இத்தாலி வீரர் லியானார்டோ போனுசி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதுமட்டுமல்லாமல் யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய வயதான வீரர் மட்டுமல்லாமல், வயதான வீரராக இருந்து கோல் அடித்தவர் என்ற பெருமையை போனுசி பெற்றார். லியானார்டோ போனுசிக்கு தற்போது 34 வயது 74 நாட்கள் ஆகிறது.

தொகுப்பு : உத்தண்டராஜ் 

;