games

img

‘‘நாங்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்’’

தில்லியில் போராடிய விவசாயிகளுக்கு பல விளையாட்டு வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி ஒன்றிய அரசு தங்களுக்கு வழங்கிய விருதுகளையும் திருப்பி தருவதாக கூறினர். இதுபற்றிய செய்தி தொகுப்பு:

விருதுகளை திருப்பி தருகிறோம்...

‘நாங்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதன் மூலமாகவே இந்த அளவுக்கு முன்னேறியுள்ளோம். அதனால் தலைநகரில் போராடிய விவசாயிகளுக்கு துணையாக இருந்தோம்’’ தாங்கள் வாங்கிய பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது உட்பட அனைத்து விருதுகளையும் திருப்பி தருகிறோம் என்று முன்னாள் விளையாட்டு வீரர்கள் பலரும் அறிவித்தனர்.  முதன் முதலில் இதை தொடங்கியது முன்னாள் கூடைப்பந்து வீரரும் அர்ஜூனா விருது வென்றவருமான சஜ்ஜன் சிங் சீமா. அவரைத் தொடர்ந்து 30 விளையாட்டு வீரர்கள் தங்களது விருதுகளை திருப்பி தருவதாகவும் அறிவித்தனர். இவர்களில், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் குர்மயில் சிங், சுரிந்தர் சிங் சோதி, பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருது வென்ற முன்னாள் மல்யுத்த வீரரான கர்தார் சிங். பஞ்சாப்பில் தங்க மங்கை என்றழைக்கப்படும் முன்னாள் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராஜ்பிர் கவுர், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் பல்விந்தர் சிங், உலகக்கோப்பை வென்ற ஹர்சரண் சிங் போபராய் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். நாங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதனால்தான் எங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய விருதுகளை திருப்பித் தருகிறோம் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், கேல்ரத்னா விருதை திருப்பி அளிக்க முன்வந்தார்.

விவசாயிகளுக்கு ஆதரவு...

ஒன்றிய பாஜக அரசின் பிடிவாதப் போக்கைக் கண்டித்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தில்லி, ஹரியானா மாநில விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களது விருதுகளையும் பதக்கங்களையும் திருப்பித் தர முன்வந்தனர். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற பூனம் ராணி, மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகத், இவரது உறவினர்களான கீதா போகத், ஃபபிதா போகத் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இந்த பின்னணியில்தான், நமது விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமை கொள்ளும் இந்தியாவில் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகள் 15 டிகிரிக்கும் குறைவாக நிலவிய அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்திய தில்லி போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.  இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய அரசின், வெளியுறவு அமைச்சகம் #India Against Propaganda, #IndiaTogether என்று இரண்டு ஹேஷ்டேகுகளை உருவாக்கி எதிர்ப்பைப் பதிவு செய்தது.

ஒன்றிய அரசுக்கு ஆதரவாக...

நாடு முழுவதிலும் இருந்தும் விவசாயிகள் தில்லிக்குச் செல்வதைத் தடுக்க ஒன்றிய பாஜக அரசு, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பீரங்கிகள், கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தி விரட்டிய போதும், குண்டாந்தடிகள் தாக்கி மண்டைகள் பிளந்த போதும், துப்பாக்கி குண்டுகள் மார்பை துளைத்த போதும் உரிமைக் குரல் எழுப்பிய விவசாயிகளுக்கு ஒரு வார்த்தை கூட ஆறுதல் தெரிவிக்காமல், கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின், விராட் கோலி, ரவி சாஸ்திரி, கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா, கவுதம் காம்பீர், ரகனே, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் ஹேஷ்டேக்குகளை தங்களது ட்விட்டரில் காப்பி அடித்தனர்.

மிரட்டலால் ஆதரவா? 

நாட்டுக்கே உணவளிக்கும் உழவர்களுக்கு எதிராக விளையாட்டு பிரபலங்கள் பதிவிட்டதை அவர்களது ரசிகர்களும், நெட்டிசன்களும் வறுத்தெடுத்தனர். இதனால், நிலைமை படுமோசமாக சென்றதால், ‘‘கருத்து வேறுபாடுகள் இருக்கும் இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இருப்போம். விவசாயிகள் நம் நாட்டுடன் ஒருங்கிணைந்தவர்கள்’’ என்று விராட் கோலி தனது நிலையை மாற்றிக் கொண்டார். இதிலிருந்து, கிரிக்கெட் பிரபலங்களின் கருத்து அவர்கள் சொந்தமாக கூறியது அல்ல. பாஜகவின் மிரட்டல் என்பது அம்பலமானது.  விவசாயிகளின் விடாமுயற்சி, உரிமைக்கான போர் முழக்கம் ஒன்றிய அரசையே ஆட்டம் போட வைத்தது. விளைவு! மூன்று வேளாண் சட்ட மசோதாக்களும் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பை வெளியிட செய்தது.  மனித குல வரலாற்றில் ரஷ்யப் புரட்சி புதிய சகாப்தத்திற்கு எப்படி வழிகோலியது என்ற உண்மையை உலக மக்களுக்கு எடுத்துரைத்ததோ, அதைப் போலவே இந்திய விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை பஞ்சாப், ஹரியானா, தில்லி, உத்தரப்பிரதேச மாநில விளையாட்டு வீரர்கள் கொண்டாடி வருவதும் போற்றுதலுக்குரியது.

- ஸ்ரீராமுலு




 

;