games

img

பாராமுகமும் பத்மஸ்ரீ விருதும்....

“விளையாட்டு எனக்கு துரோகம்இழைத்ததாக நான் ஒருபோதும் உணரவில்லை. ஆனால் இப்போது கூட நான் உணரும் ஒரே விஷயம், எனக்கு போதுமான அங்கீகாரமும் விருதுகளும் வழங்கப்படவில்லை என்பதுதான்.ஆனாலும் நான் விளையாட்டை நேசிக்கிறேன். அதிலிருந்து என்னை விடுவிக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது”.தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் அனிதா பால்துரை,ஓராண்டுக்கு முன்பு  இப்படி கூறியது ஏன்? என்பது தெரிந்தால்தான் அவரது மனவலியின் நியாயத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்கள் கூடைப்பந்தாட்ட வீராங்கனை, இந்திய பெண்கள் தேசியகூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன், தாய் நாட்டுக்காக 18 ஆண்டுகாலம் (2000- 2017) விளையாடி சாதனை படைத்த மங்கை என்ற பெருமை பெற்றவர் அனிதா பால்ராஜ்.சர்வதேச அளவில் தங்கம் உட்பட 30 பதக்கங்களை குவித்து சாதனை படைத்த அனிதா, இளையோர், சீனியர்அணிகளை வழி நடத்தி ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் மற்றும் ஆசியவிளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று கொடுத்த வீராங்கனை.சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அனிதா பால்துரை, சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் இந்தியகூடைப்பந்து பெண்கள் அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார்.

உலகின் மிகச் சிறந்த 10 வீராங்கனைகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.ஆசிய அணிகள் அனைத்துடனும் விளையாடியவர். ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக 8 முறைக்கு மேல் கலந்து கொண்ட ஒரே இந்திய வீராங்கனையும் இவரே.கடந்த 2005ஆம் ஆண்டு தாய்லாந்து தொடரிலும் இலங்கையில் நடந்த ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டியிலும் இந்திய அணி தங்கம் வெல்வதற்கு அனிதாவின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.35 வயதாகும் அனிதா, சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றார். பிறகு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் பட்டம் பெற்று தெற்கு ரயில்வே தலைமை பயணச்சீட்டு கண்காணிப்பாளராக  பணிபுரிந்து வருகிறார்.கூடைப் பந்தாட்டத்தில் பந்தை மிக நேர்த்தியாக கையாளும் தனித் தன்மை கொண்டவராக திகழ்ந்த அனிதா, பந்தை ட்ரிபிள் செய்யும் விதம், கூடையை நோக்கி செலுத்தும் பாங்கு,எதிரணி வீராங்கனைகளை கிராஸ் ஓவர் செய்து பந்தை கூடையின் உள்ளேஅனுப்புவதிலும் அவருக்கு நிகர் அவரே.தனது இளமைக் காலத்தை நாட்டுக்காகவே சுமார் 18 ஆண்டு காலம் விளையாட்டுத் துறையில் அர்ப்பணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிதா, தொடர்ச்சியாக அர்ஜுனா விருதுக்காக விண்ணப்பித்து எதிர்பார்த்து காத்திருந்தார்.‌

ஒவ்வொரு முறையும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மகளுக்கு அங்கீகாரமும் விருதும் கிடைக்கும் என்று வழி மேல் விழி வைத்திருந்த தந்தையின் மரணம் அனிதாவை கொந்தளிக்க வைத்தது.கொதித்தெழுந்த அனிதா,”நான் நாட்டுக்காக கூடைப் பந்து விளையாட தொடங்கிய நாளிலிருந்து இந்திய கூடைப்பந்து அணி படிப்படியாக உச்சத்தை தொட்டது. ஆனால், கூடைப்பந்து விளையாட்டை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று கடுமையாக சாடினார். அனிதாவின் உள்ளக்குமுறல் ஊடகங்களில் எதிரொலிக்க, அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இருப்பினும் அதை சமாளிப்பதற்கு இந்த முறை அனிதாவுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. 

கட்டுரையாளர் : சி. ஸ்ரீராமுலு
 

;