45 நாடுகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அக்., 8 வரை இந்த தொடரில் போட்டியை நடத்தும் சீனா அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022இல் நடக்க வேண்டிய 19-வது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டி தாமதமாக 2023இல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சாதனையுடன் இந்தியாவிற்கு தங்கம்
ஆடவர் 50 மீ ரைபிள் (3 வகை) துப்பாக்கிச்சுடுதல் அணி பிரிவில் பிரதாப் சிங், ஸ்வப்னில் சுரேஷ், ஷரோன் அகில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1769 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றது. இப்பிரிவில் சீன அணி 1763 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், 1748 புள்ளிகளுடன் தென் கொரியா அணி வெண்கலப்பதக்கமும் வென்றது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்திய அணி உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இதற்கு முன்னர் ஆடவர் 50 மீ ரைபிள் (3 வகை) துப்பாக்கிச்சுடுதல் அணி பிரிவில் அமெரிக்க அணி கடந்த 2022இல் 1761 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றதே உலக சாதனையாக இருந்தது.
ஒரே பிரிவில் தங்கம், வெள்ளி
மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பாலக் 242.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 239.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்க மும், பாகிஸ்தான் வீராங்கனை கிஸ்மாலா 218.2 புள்ளிகளு டன் வெண்கலப்பதக்கம் வென்றனர். ஈஷா சிங் ஏற்கெனவே மகளிர் 25 மீ பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 மீ ஏர் பிஸ்டல் அணி பிரிவில் வெள்ளி
மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் அணி பிரிவில் பாலக், ஈஷா சிங், திவ்யா ஆகியோர் கொண்ட இந்தியா அணி 1731-50x என்ற புள்ளிக்கணக்கில் வெள்ளிப்பதக் கம் வென்றது. சீன அணி 1736-66x என்ற புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், சீன தைபே அணி 1723-53x என்ற புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
ஸ்குவாஷ் - வெண்கலம்
மகளிர் ஸ்குவாஷ் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும் ஆட்ட விதிகளின்படி இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
பதக்கப் பட்டியல்
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1.சீனா 98 57 29 184
2.தென்கொரியா 24 24 43 91
3.ஜப்பான் 21 33 34 88
4.இந்தியா 8 12 12 32
4 பதக்கங்களை அள்ளிய பிரதாப் சிங்
ஆடவர் 50 மீ ரைபிள் (3 வகை) துப்பாக்கிச் சுடுதல் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் பிரதாப் சிங் நூலிழையில் தங்கப்பதக்கத்தை இழந்து 459.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். சீன வீரர் லின்சு 460.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், மற்றொரு சீன வீரர் டியான் 448.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்திய வீரர் பிரதாப் சிங் நடப்பு சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியுள்ளார்.
டென்னிஸ் வெள்ளி
டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகேத் மைனேனி - ராம் குமார் இணை, சீன தைபேவின் ஹிஸு யு - ஜேசன் ஜோடியிடம் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்ந்தது. வெற்றி பெற்ற சீன தைபேவின் ஹிஸு யு - ஜேசன் ஜோடிக்கு தங்கப்பதக்கமும், தோல்வி கண்டதன் மூலம் இந்தியாவின் சாகேத் மைனேனி - ராம் குமார் இணை வெள்ளிப்பதக்கம் வென்றனர்.