ஒன்றிய அரசு தனக்கு அளித்த கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் திருப்பியளித்தார்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் WFI தலைவராக தேர்வு செய்யப்பட்டதைக் கண்டித்து, ஒன்றிய அரசு தனக்கு அளித்த கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் திருப்பியளித்தார்.
அவர் விருதுகளை திருப்பியளிப்பதற்காக தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் நோக்கி சென்றார். ஆனால் செல்லும் வழியில் போலீசார் அவரைத் தடுத்ததால், தில்லி கடமைப் பாதையிலேயே (கர்த்தவ்யா பாத்) கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வைத்துவிட்டுத் திரும்பினார். பின்னர் அந்த விருதுகளை தில்லி போலீசார் எடுத்துச் சென்றனர்.
பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் WFI தலைவராக தேர்வு செய்யப்பட்டதைக் கண்டித்து, முன்னதாக மல்யுத்த விராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதேபோல், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.