டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தொடக்கம் முதலே அசத்தலாக விளையாடி வந்தார். ஆடவர் டென்னிஸ் பிரிவில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது அரையிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் 5-ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் ஜுவரேவிடம் வீழ்ந்தார்.
சனியன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினின் பாப்லோவிடம் 4-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். ஜோகோவிச்சிடம் வெற்றி பெற்ற பாப்லோ நடுத்தர விளையாட்டு திறன் உடையவர் தான். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 2 முறை அரையிறுதி வரை முன்னேறியுள்ளார். முன்னதாக கலப்பு இரட்டையர் பிரிவிலும் ஜோகோவிச் - ஸ்டோஜாநோவிச் இணை ஆஸ்திரேலிய இணையிடம் தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை இழந்தது.