games

img

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி... அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் வென்றது.... பிரேசிலை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை கைப்பற்றியது...

ரியோடிஜெனீரோ:
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 28 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றிக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மிகப்பிரபலமான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் 47-வது தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்றது. ஜூலை 11 அன்று ரியோ டி ஜெனீரோ நகரத்தில் மரக்காணா ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவும், பிரேசிலும் களம்கண்டன. கொரோனா வைரஸ் பரவலால் 10 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.

துவக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் ரோட்ரிகோ டீ பால் தன்னிடமிருந்து பந்தை ஏஞ்சல் டி மரியாவுக்கு பாஸ் செய்தார். இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மரியா, பிரேசில் கோல்கீப்பர் எடர்ஸனை லாவகமாகத் தாண்டி பந்தை தூக்கி அடித்து கோலாக்கினார். இதன்மூலம் அர்ஜெண்டினா அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. பிரேசில் அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை அர்ஜெண்டினா வீரர்களும் கோல்கீப்பரும் தடுத்தனர். கடைசி நேரத்தில் பிரேசில் அணிக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில் நெய்மர் அடித்த பந்தை , தியாகோ சில்வா தலையில் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோல் போஸ்ட்டுக்கு மேல் பட்டுச் சென்று ஏமாற்றமளித்தது.

ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றது. கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜெண்டினா 15-வது முறையாக வென்றுள்ளது.இதற்கு முன் கடைசியாக கடந்த 1993 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை அர்ஜெண்டினா அணி வென்றிருந்தது. 28 ஆண்டுகளுக்குப் பின் தற்போது லயோனல் மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றுள்ளது . அர்ஜெண்டினாவுக்கு அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி பெற்றுத்தரும் முதல் பெரிய சர்வதேச கோப்பை இதுவாகும். கோபா அமெரிக்காவை அதிக முறை வென்ற அணி என்ற உருகுவே அணியின் சாதனையை இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா சமன் செய்துள்ளது. 

ஆட்டநாயகன் விருது வெற்றிக்கோலை அடித்த அர்ஜெண்டினா வீரர் டி மரியாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த கோல்கீப்பருக்கான விருது அர்ஜெண்டினா கோல்கீப்பர் எமிலியோ மார்டினசுக்கும் அதிக கோல்கள் அடித்த விருது மெஸ்ஸிக்கும் வழங்கப்பட்டன. கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு ரூ.47 கோடியும், இரண்டாவது இடம் பெற்ற பிரேசிலுக்கு ரூ.25 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. 

சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கும் அதன் கேப்டன் மெஸ்ஸிக்கும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் படங்களை பதிவிட்டு,வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

                                   ***************

அர்ஜெண்டினாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து

விடாப்பிடியான போராட்டத் தில் உண்மையில் வென்றது கால்பந்தை உயர்த்திப்பிடிக்கும் மனிதாபிமானமும் சகோதரத்துவமும் விளையாட்டு வீரர் என்கிற உணர்வுமே என்று கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற அர் ஜெண்டினாவை கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்தினார்.

கால்பந்தின் அழகு என்பதுஎல்லைகளை கடந்த சகோதரத்துவம். அதனால்தான் அர்ஜெண் டினா மற்றும் பிரேசிலுக்காக கூச்சலிட இங்கு கேரளாவில் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். இன் றைய கோபா அமெரிக்கா இறுதிப் போட்டி அந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.கடுமையான போட்டியின் உண்மையான வெற்றியாளர் கால்பந்து ஆதரிக்கும் மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் விளையாட்டு வீரர்களின் ஒற்றுமைஉணர்வுமாகும். அர்ஜெண்டினாவின் வெற்றியும் உலக நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் மகுடமும் எவ்வளவு அழகாக இருக்கிறது! மிகவும் பிரபலமான கால்பந்துவிளையாட்டின் சாரத்தை நிலைநிறுத்துவோம்.கால்பந்தாட்ட ரசிகர்களின் மகிழ்ச்சியில் அவர்களில் ஒருவனாக இணைந்து கொள்கிறேன் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு : உத்தண்டராஜ்