games

img

விளையாட்டு செய்திகள்

அமெ.விடம் வீழ்ந்த பாகிஸ்தான் அணி

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கூட்டாக நடை பெற்று வரும் 9ஆவது சீசன் உலகக் கோப்பை டி-20 தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரு கிறது. வியாழனன்று இரவு  நடை பெற்ற “குரூப் ஏ” பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணியும்,  அமெரிக்கா அணிகளும் மோதின.

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு  செய்தது. முதலில் கள மிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்த நிலையில், வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

அமெரிக்கா அபார வெற்றி

சூப்பர் ஓவரில் முதலில் கள மிறங்கிய அமெரிக்கா 6 பந்துகளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் குவித் தது. 6 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அமெரிக்க வீரர் சவுரப் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவிய நிலையில், முன்னாள் சாம்பி யனான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி  உலகக்கோப்பை டி-20 தொடரில் இரண் டாவது வெற்றியை ருசித்துள்ளது அமெரிக்கா. 

கிரிக்கெட் உலகில் அசுர பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான பாகிஸ் தான் அணியை, கிரிக்கெட் விளை யாட்டில் அனுபவமே இல்லாத அமெரிக்கா வீழ்த்தியிருப்பது, விளை யாட்டு உலகில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரில் தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்கா கனடா அணியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானம் தான் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம்

கிரிக்கெட் உலகின் முக்கிய சாம்பியன் அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் அணி, அனுபவமில்லா அமெரிக்காவிடம் தோல்வி கண்டு இருப்பது கிரிக்கெட் உலகில் மட்டுமின்றி ஒட்டுமொத்த விளையாட்டு உலகிலும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மிக மோசமான வார்த்தைகளால் அந்நாட்டு வீரர்களை வசைபாடி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக மைதானத்தின் தன்மையே இருக்கலாம் என சர்வதேச கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவில் உலகக்கோப்பை டி-20 தொடருக்காக புளோரிடா, டல்லாஸ், நியூயார்க் ஆகிய 3 நகரங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் புளோரிடா மைதானம் ஓரளவு கணிக்கக்கூடிய நிலையில் உள்ளது. ஆனால் டல்லாஸ், நியூயார்க் மைதானங்கள் கணிக்க முடி யாத நிலையில் உள்ளது. இரு மைதானங்களில் கணிப்பை  மீறி பந்துகள் தாறுமாறாக எகிறுவதால் இந்த ஓரு மைதானங்களில் விளையாடும் நாடுகள் கடுமையாக திணறி வருகின்றன. அமெரிக்க வீரர்கள் அங்குள்ள 3 மைதானங்களிலும் கடந்த காலங்களில் விளையாடிய அனுபவத்தை பெற்றிருப்பதால் அவர்கள் திணறலின்றி விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் கடலில் நனைய வைத்த புகைப்படம்

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா - அமெரிக்க - மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டாக  நடைபெறுகின்றன. இந்த தொடருக்கான ஆசிய அள விலான தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் மோதின. வியாழனன்று இரவு 7 மணிக்கு மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த  ஆட்டம் டிராவில் நிறைவு பெற்ற நிலையில், இந்த ஆட்டத்து டன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஒட்டுமொத்த கால்பந்து வாழ்க்கையில் இருந்தே ஓய்வு பெற்றார். கொல்கத்தா மைதானத்தில் குவிந்து இருந்த ரசிகர்கள் சுனில் சேத்ரிக்கு இருக்கையில் எழுந்து நின்று கைதட்டலுடன் பிரியாவிடை அளித்த நிலையில், சுனில் சேத்ரி கண்ணீருடன் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சுனில் சேத்ரி கண்ணீருடன் கால்பந்து விளையாட்டில் விடைபெறும் பொழுது அவரை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞரும் கண்ணீருடன் புகைப்படம் எடுத்தார். கண்ணீரை வரவைக்கக்கூடிய இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

நெதர்லாந்து - 
தென் ஆப்பிரிக்கா
இடம் : நியூயார்க், அமெரிக்கா
நேரம் : இரவு 8:00 மணி
*
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
இடம் : பார்படாஸ், மேற்கு இந்தியத் தீவுகள்,
நேரம் : இரவு 10:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஹாட்ஸ்டார் (ஒடிடி)