games

img

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் - நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் விலகல்

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இருந்து பிரபல நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் விலகியுள்ளார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி இந்தியா வருகைதந்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணி மோதும் முதல் டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக டி20 தொடரிலிருந்து விலகுவதாக நேற்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அறிவித்தார். இதனால் முதல் டி20 ஆட்டத்தில் டிம் செளதி தலைமையில் நியூசிலாந்து டி20 அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேன் வில்லியம்சனுக்கு அடுத்ததாகப் பிரபல வீரர் கைல் ஜேமிசனும் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை அவர் எடுத்துள்ளதாக நியூசி. பயிற்சியாளர் கேரி ஸ்டட் கூறியுள்ளார். மேலும், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகிய லாகி பர்குசன், ஜெய்ப்பூர் டி20 ஆட்டத்தில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.