ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாகப் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த சீசனில் எஞ்சியுள்ள 31 போட்டிகளைச் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி தற்போது ஒவ்வொரு அணிகளாக ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து வருகின்றன.
இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்கள் சிலர் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த இரண்டாவது பாதியிலிருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி துவக்க வீரரான ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். அவரது விலகல் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஜோஸ் பட்லர் தனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால் மனைவியைக் கவனித்துக் கொள்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பட்லருக்கு மாற்றாக நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயம் காரணமாக, 14ஆவது சீசனில் எஞ்சிய லீக் போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர். இந்நிலையில், பட்லரும் விலகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.