லக்னோ ஐபிஎல் அணியின் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் லக்னோ அணியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் ரூ 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் தலைமைப் பயிற்சியாளராக ஜீம்பாப்வே முன்னாள் வீரர் ஆன்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கௌதம் கம்பீர் இந்திய அணிக்காக 58 டெஸ்ட் ஆட்டங்களிலும், 147 ஒருநாள் ஆட்டங்களிலும், 37 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளார்.
இதுகுறித்து கௌதம் கம்பீர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஐபிஎல் போட்டியில் மீண்டும் களமிறங்குவது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.வெற்றி பெற வேண்டும் என்கிற நெருப்பு என்னுள் இன்றும் நன்றாகவே எரிந்து கொண்டு உள்ளது எனத் தெரிவித்தார்.