ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்படுகிறது. இதற்கான டெண்டர் விண்ணப்பம் வினியோகத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.
ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் - அக்டோபர் காலகட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு, அதாவது 15வது சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்ப்பதற்கான டெண்டர் விண்ணப்ப வினியோகத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் ஆடிவரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன.
இதையடுத்து புதிய இரு அணிகளுக்கான உரிமத்தைப் பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ நேற்று அழைப்பு விடுத்து டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் படிவத்தில் விதிமுறைகள், நிபந்தனைகள் போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன. ஆண்டுக்குக் குறைந்தது ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களே விண்ணப்பிக்க முடியும். மூன்று நிறுவனங்கள் இணைந்து ஒரே பெயரில் அணியை வாங்க விண்ணப்பிக்கலாம். ஆனால் 3க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து கூட்டாக அணியை வாங்க அனுமதி கிடையாது.
டெண்டர் விண்ணப்பத்தை அக்டோபர் 5 ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.10 லட்சமாகும். இந்த தொகை திருப்பி தரப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளை விற்பதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்குத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆமதாபாத், லக்னோ, புனே ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அணிகள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த, 2 புதிய அணிகளை வாங்கக் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா க்ரூப், அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அதானி க்ரூப், ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் அரவிந்தா ஃபார்மா லிமிடெட் மற்றும் குஜராத்தில் இயங்கும் டொரெண்ட் க்ரூப் ஆகிய 4 நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 அணிகள் இடம் பெறும் போது ஆட்டங்களின் எண்ணிக்கை 60ல் இருந்து 74 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.