பாரீஸ் பாரா ஒலிம்பிக் 2024
பரிசுப் பொருள் வழங்குவதில் பாகுபாடு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், பதக்கம் வழங்கும் விவகாரத்தில் பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி குழு பாகுபாட்டை உருவாக்கியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொதுப்பிரிவு ஒலிம்பிக்கில் வீரர் - வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கும் பொழுது பாரீஸ் ஒலிம்பிக் கிராமம், ஈபிள் கோபுரம் அடங்கிய டிஜிட்டல் ஸ்கிரீன் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கும் பொழுது பாரீஸ் ஒலிம்பிக் சின்ன பொம்மை வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவிற்கு ஒரு பரிசும், பாரா ஒலிம்பிக்கில் ஒரு பரிசும் என இரண்டுவிதமான பரிசுகளை வழங்கி பாகுபாட்டைஉருவாக்கியுள்ளது பாரீஸ் ஓலிம்பிக் கமிட்டி.
நெருங்க முடியாத உயரத்தில் சீனா
பாரீஸ் பாரா ஒலிம்பிக் தொடரின் பதக்கப்பட்டியலில் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு சீனா உச்சத்தில் உள்ளது. 9ஆவது நாளான வெள்ளியன்று மாலை 5 மணி நிலவரப்படி சீனா 74 தங்கம், 55 வெள்ளி, 39 வெண்கலம் என 168 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருந்தது. 38 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என 87 பதக்கங்களுடன் பிரிட்டன் 2ஆவது இடத்திலும், 27 தங்கம், 33 வெள்ளி, 18 வெண்கலம் என 78 பதக்கங்களுடன் அமெரிக்கா 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் 17ஆவது இடத்தில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையிலும் சரி, பாரீஸ் பாரா ஒலிம்பிக் தொடரிலும் சரி பதக்கப் பட்டியலில் சீனாவை எந்த நாடும் பின்னுக்குத் தள்ள வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2024
இறுதியில் சபலென்கா, பெகுலா
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144ஆவது சீசன் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 26 அன்று தொடங்கிய நிலையில், தற் போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்திய நேரப்படி வெள்ளியன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் எம்மா நவர்ரோவை எதிர்கொண்டார். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தின் மூலம் 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார். கடந்த காலங்களை விட நடப்பு சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய எம்மா நவர்ரோ அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். பெகுலா அசத்தல் மகளிர் ஒற்றையர் பிரிவு மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசை யில் 6ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலா, தரவரிசை யில் இல்லாத செக்குடியரசின் முச் சோவாவை எதிர்கொண்டார். தொடக்கத்தில் முச்சோவா ஆதிக்கம் செலுத்தினாலும், இரண்டாம் செட்டில் தொடக்க கேம் முதல் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்த பெகுலா 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறினார். சபலென்கா - பெகுலா இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.